×
Saravana Stores

‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: ‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி என்று எடப்பாடிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி, “சாதனை அல்ல வேதனை” என விமர்சித்து அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. திமுக நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது, பழனிசாமியின் அடிவயிற்றில் பற்றி எரிகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. திமுக ஆட்சியை விமர்சித்திருக்கும் பழனிசாமிக்கு, பழையதை எல்லாம் சற்றே நினைவூட்ட விரும்புகிறேன். 2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற போது, அதிமுக ஆட்சிக்கு வந்த அந்த நாளைக் கொண்டாடாமல், இடையில் 2017 பிப்ரவரி 16ம் தேதி, தான் முதல்வரான தினத்தைத் தான் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடினார் பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்த தினத்தை மழுங்கடித்துவிட்டு, தனக்கு மகுடம் சூட்டிய நாளை புகழாரம் பாடி மகிழ்ந்த பழனிசாமிக்கு, திமுகவின் 3 ஆண்டு ஆட்சியைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?. 2017 பிப்ரவரி 16ம் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டில் பழனிசாமியை யாருக்குத் தெரியும்?. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கடைசி ஆளாக தூரத்தில் நின்றிருந்த பழனிசாமி, ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியிலேயே வந்து அமர்ந்துவிட்டு, ஜெயலலிதா பதவியேற்ற தினத்தையே மறைத்த புண்ணியவான். தர்மயுத்த காலத்தில், ‘யார் முதல்வர் ஆகலாம்’ என்கிற சண்டையில் பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஆளுநர் மாளிகையை வட்டமடித்தபோது, சசிகலா அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்குமா என்ற அளவில் தான் பழனிசாமி பம்மிக் கிடந்தார். சசிகலாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால், யாரை முதல்வராக்கலாம் எனச் சசிகலா யோசித்தபோது பழனிசாமிக்கு அடித்தது ஜாக்பாட்.

ஜெயலலிதா காலில் அதிமுகவினர் விதவிதமாக விழுந்து வணங்கும் காட்சிகள் எத்தனையோ பார்த்திருக்கிறோம். தன்னை முதல்வராக்கிய சசிகலா காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசி வாங்குவதற்காகப் பழனிசாமி, தவழ்ந்து சென்று நாற்காலிகளைத் தாண்டி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த காட்சியை, பார்த்து இந்தியாவே சிரித்ததே. தலைவி ஜெயலலிதாவுக்குக்கூட செய்யாத இந்த மரியாதையைச் சசிகலாவுக்காகச் செய்த பழனிசாமி, நான்கே மாதத்தில் ‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து, சசிகலாவுக்கே துரோகம் செய்தார். ஆட்சியில் அமர்ந்ததும் பழனிசாமி ஜெயலலிதாவாக மாற நினைத்தார். அவரைப் போலவே சட்டமன்ற விதி 110ன் கீழ் தினம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் ஒன்றும் செயலுக்கு வரவில்லை. ஜெயலலிதா எதிர்த்த உணவுப் பாதுகாப்பு, உதய் மின் திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் பழனிசாமி வலிந்து சென்று மோடி அரசை ஆதரித்தார்.

தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குக் கீழிறங்கி மோடி அரசுக்குக் கூழைக்கும்பிடு போட்டு மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்தார். ஜெயலலிதாவாக மாற வேண்டும் என நினைத்த பழனிசாமிக்கு ஒருபோதும் துணிச்சல் மட்டும் வாய்க்கவே இல்லை. மோடி கொண்டு வந்த எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார். பழனிசாமி ஆட்சியில் நடந்ததை எல்லாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 13 உயிர்களைப் பலி வாங்கி, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க வைத்தது யார் ஆட்சியில் நடந்தது?. பொள்ளாச்சியில் இளம் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்கள் அதிமுக நிர்வாகிகள் தானே.

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மறந்துவிட்டதா?. தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் எனப் பலரும் லஞ்சம் வாங்கியது எல்லாம் பழனிசாமி சட்டையில் குத்தப்பட்ட மெடல்கள் தான். இவையெல்லாம் பழனிசாமி ஆட்சியில் இருந்த சட்டத்தின் மாட்சிமைகள். திமுக ஆட்சி பயனற்ற ஆட்சி என்பதைத் தமிழக மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள் என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி. பொறுத்திருங்கள் பழனிசாமி, ஜூன் 4ம் தேதிக்கு 27 நாட்கள் தான் உள்ளது. புதுச்சேரியையும் சேர்த்து நாற்பது தொகுதிகளிலும் உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அப்போது தெரியும் பயனற்றவர் யார் என்பது. தன்னுடைய நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குக் கீழிறங்கி மோடி அரசுக்குக் கூழைக்கும்பிடு போட்டு மாநில உரிமைகளை ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்தார்.

The post ‘அமைதிப்படை’ அமாவாசை அவதாரம் எடுத்து சசிகலாவுக்கே துரோகம்; மோடி கொண்டு வந்த சட்டங்களை ஆதரித்து அதிமுகவை ‘அமித் ஷா திமுக’ ஆக்கினார்: எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Peace Army ,Amavasi ,Sasikala ,AIADMK ,Amit Shah ,DMK ,Modi ,RS ,Bharati ,Edappadi ,Chennai ,RS Bharti ,Palaniswami ,DMK government ,RS Bharati ,Dinakaran ,
× RELATED 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!