கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தொழிற்சாலைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வரவழைத்து வடமாநில தொழிலாளர்களை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் சூளகிரி, ஓசூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதனை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி தமிழகத்திற்கு வரும் வடமாநில இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் பெரிய தொழிற்சாலைகளில் வேலை-தங்குமிடம் இலவசம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் சிலர் சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். அதனை நம்பி அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 தொழிலாளர்கள் ரயில் மூலம் கடந்த 5ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர் விளம்பரத்தில் பார்த்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து, போனில் பேசியவர்கள், காரை அனுப்பி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் 9 பேரையும் கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் பேசிய கும்பல், ‘உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொருவரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும். இல்லையெனில் அறையை விட்டு வெளியில் செல்ல முடியாது’ என மிரட்டியுள்ளனர். விபரீதத்தை உணர்ந்த வடமாநில தொழிலாளர்களும் தங்களிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். ஒருசிலர் உறவினர்களிடம் பேசி பணம் வாங்கி தருகிறேன் என கூறி தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலை கூறியுள்ளனர். அவர்கள் குருபரப்பள்ளி போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போலீசார் சோதனை செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை மீட்டனர்.
விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வடமலம்பட்டி நிஷாந்த் (26), போச்சம்பள்ளி பிரபு (29), பவித்ரன் (28), விளங்காமுடி மோகன் (27), வேட்டியம்பட்டி வினோத் (34), வலசகவுண்டனூர் காளிதாஸ் (33), கும்மனூர் அரவிந்த் (21), மோடிக்குப்பம் சக்திவேல் (38), குருபரப்பள்ளி மணிகண்டன் (31) ஆகியோர், வட மாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. இதையடுத்து, 9 பேரையும் குருபரப்பள்ளி போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையிலடைத்தனர். இதில், நிஷாந்த் மற்றும் அரவிந்த், பிரபு ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி, வடமாநில தொழிலாளர்களை மிரட்டி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது appeared first on Dinakaran.