×
Saravana Stores

அருள்மணம் கமழும் அருணஜடேஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*தஞ்சை திருப்பனந்தாள்

இந்தப் பிரபஞ்சத்தில் பூமியே அதி சக்தி வாய்ந்ததாக, புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது. இறை சக்தி, தன் அற்புதமான ஆற்றலை, வீர்யத்தை முழுவதுமாகப் படரச் செய்திருக்கும் இடம் பூமி. எனவே தான் இறைவனைக் குறித்து, தவம், தியானம் செய்ய, மனிதர்களும், தேவர்களும், ஏன்! இறைவனும்கூட பூமியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

உலகத்தில், ஆதி அணுவான ஈசனின் பரமதயாளத்தை சக்தியை, அவனின் கருணையை, நடத்திய திருவிளையாடல்களை குறிக்கும் அற்புதத் தலங்கள் ஏராளம். தம் அடியவர்களுக்காகவே இறங்கி வந்து, அவர்களின் குற்றங்களை எல்லாம் நீக்கி, தன் மேல் அவர்கள் கொண்ட பக்தியை மட்டுமே கருத்தில் கொண்ட உயர்ந்த உத்தமர் சிவபெருமான்.

“செங்கமலப் பொற்பாதம் தந்தருளும்
சேவகன்” என்கிறது திருப்பாவை.

“சிறியனுக் கினியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே”
என்று போற்றுகிறார் கருவூர்த் தேவர்.

தம் அடியவர்களுக்காக பல இன்னல்களை தான் ஏற்ற ஈசன், தன் பக்தை ஒருத்திக்காக குனிந்து மாலையை ஏற்றுக் கொண்ட அற்புதமும் நடந்திருக்கிறது. அந்தத் தெய்வீகத் தலம் திருப்பனந்தாள். தாடகை என்ற பெண், தனக்கு குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்கையில், பிரம்மா அவள் முன் தோன்றி “நீ தாலவனம் சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் உன் ஆசை நிறைவேறும்” என்கிறார். அவளும் அதேபோல் இத்தலத்துக்கு வந்து நியமப்படி ஈசனை பூஜிக்கிறாள்.

ஒருநாள் அவளின் பக்தியை உலகிற்குக் காட்ட இறைவன் விரும்புகிறார். வழக்கம்போல் பூஜை முடிந்து ஈசனுக்கு மாலை சாற்றும்போது அவளின் ஆடை நெகிழ்கிறது. அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக் கொண்டு மாலையைப் போட முயல்கிறாள். ஆனால் ஈசன் உயரமாக இருந்ததால் முடியவில்லை. மனம் வருந்திய அவள், இறைவனை வேண்டுகிறாள்.

“இறைவா, இம்மாலையை நீங்கள் ஏற்றுக்கொண்டு எனக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க வேண்டுகிறாள். பக்தையின் கண்ணீரை கண்டு ஈசன் வாளாயிருப்பாரா? உடனே பெருமான் தன் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொள்கிறார். எனவேதான் இக்கோயிலுக்கு தாடகையீஸ்வரம், தாடகேஸ்வரம் என்று வேறு பெயர்களும் வழங்குகிறது. பனையின் தாளில் ஈசன் எழுந்தருளி இருப்பதாலும், பனை மரம் தல விருட்சமாக இருப்பதாலும் “பனந்தாள்’’ என்று பெயர் பெற்றது. தாடகைக்காகக் குனிந்த பெருமான் குங்கிலியக் கலய நாயனாருக்காக நிமிர்கிறார். சோழ அரசன் வீரசேனன் என்பவன், இறைவன் திருமுடி சாய்ந்திருப்பதை கேள்விப்பட்டு அதை நிமிர்த்த விரும்பினான். யானை, குதிரை முதலியவைகளைக் கட்டி இழுக்க முயன்றான்.

ஆனால் அவன் முயற்சி
பலனளிக்கவில்லை. இதையே;
“செங்கண் வெள் ஏற்றின் பாகன்: திருப்பனந்தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட, அரசன் ஆர்வம் பொங்கித்
தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக் கங்குலும்
பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல’’

என்று மன்னன் கவலையைக் கூறுகிறது குங்கிலயக் கலய நாயனார் புராணம். இதைக் கேள்விப்பட்ட நாயனார், தானும் இத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். தன் கழுத்தில் அரிகண்டமும், இறைவன் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுக்க ஆரம்பித்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. உடனே இறைவன் தோன்றி நாயனாரின் சிரசைக் காத்தார். அவரின் திருமுடியும் உயர்ந்தது.

“சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இவ் இளைப்புற்று ஏய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேன் அலர் கொன்றையார் தன் திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்’’.
என்று விவரிக்கிறது குங்கிலியக் கலய நாயனார் புராணம்.

இங்குதான் உமையம்மை ஈசனைப் பூஜித்து, ஞானோபதேசம் பெற்றார். சிவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரம்மாவின் பாவத்தைப் போக்கியது, இந்திரன், திருமால், சூரியனின் பாவங்களைப் போக்கிய தலம் இது. வாசுகியின் மகள் சுமதி, இறைவனைப் பூஜித்து திருமண வரம் பெற்றதால், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தீர்த்தங்களும் உண்டாக்கி உள்ளனர் நாக கன்னிகைகள். அன்னை ஈசனிடம் இங்கு ஞான உபதேசம் பெறும் முன் பாலாம்பிகை எனவும், பெற்ற பின் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு பனைமரமே தல விருட்சமாக இருக்கிறது. இத்தலம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மரம் செழுமையாக உள்ளது. இறைவன் வேதங்களை விரித்து ஓத வல்லான் என்பதை சம்பந்தர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

“விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் இயலே ழுலகிலுயிரும்
பிரித்தவன் செஞ்சடை மேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே’’
என்கிறது சம்பந்தர் தேவாரம்.

இத்தலத்து இறைவனைத் தொழுதால், நம் பாவங்கள், பிணிகள், தோஷங்கள் அகலும் என்று மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார் சம்பந்தர்.

“சூழ்தரும் வல்வினையுமுடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்

புனலும் போழிள வெண்மதியும் மணல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான் பனந்தாட்டிருத் தாடகை யீச்சரமே’’
– என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

தல விருட்சத்தின் அருகில் உள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படுகிறது. இதன் வழியாக நாககன்னிகையர் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. சுவாமி விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் காணப்படுகிறது. பதினாறு கால் மண்டபத்தில் தாடகைக்காக இறைவன் வளைந்து கொடுத்ததும், குங்கிலிய நாயனாருக்காக வளைவு நிமிர்ந்ததும் சிற்பங்களாக உள்ளது. இத்தலத்தில்தான் ஸ்ரீகுமரகுருபரர் நிறுவிய காசி மடம் உள்ளது. இவ்வூரில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் தண்பொழில் சூழ் பனந்தாள் என்று இவ்வூரைக் குறிப்பிடுகிறார். காவிரியாறின் கிளை ஆறான மண்ணியாறு பாய்வதால் இத்தலம் மிக வளமையுடன் சுற்றிலும் பனைமரங்கள் சூழ காணப்படுகிறது. முன்பு இவ்வூர் பனைமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தாலவனம் என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. கோயிலின் பரப்பு “இருமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நாலுமா நிலம்” என்று கல்வெட்டுக் கூறுகின்றது.

இறைவனின் திருப்பெயர் ஸ்ரீஅருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர் என்றும் அம்பிகையின் பெயர் பெரியநாயகி என்றும் வழங்கப்படுகிறது. ஈசனின் திருவிளையாடல்களை தேவாரப் பாடல்கள் போற்றி, முடிவில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஈசன் இருக்கும் இடம் இத்தலம் என்று கூறும். அவ்வாறே;

“தண்வயல் சூழ் பணந்தாட்டிருத் தாடகை யீச்சரத்துக்
கண்னயலே பிறையானவன் றன்னைமுன் காழியர் கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம்பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே’’
என்று சம்பந்தர் இத்தலம் பற்றிக் கூறுகிறார்.

இப்பதிகத்தைப் பாடுவோர்களின் வினைகள் யாவும் தீரும் என்கிறார் இத்தேவாரத்தில்.சிவபெருமானின் யோக குரு வடிவமே தட்சிணாமூர்த்தி. இவர் எல்லாச் சிவ ஆலயங்களில் தென்முகமாக இருப்பார். ஒரு சில ஆலயங்களில் மூலவரே குருவாக இருப்பார். அத்தகைய சிறப்புப் பெற்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று. எனவே நவக்கிரகத் தோஷத்தில் திருமணத் தடை இருந்தால், இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். வாசுகி என்ற நாகத்தின் மகளான சுமதி இங்கு வந்து இறைவனைப் பூஜித்து, அரித்துவசன் என்ற மன்னனை மணந்தாள். இது செஞ்சடை வேதியர் எழுதிய திருப்பனந்தாள் தல புராணத்தில் உள்ளது. குமரகுருபரரால் ஏற்படுத்தப்பட்ட காசிமடம் இங்கு உள்ளது. இங்குள்ள சுப்ரமணியரை வழிபட்டு தாடகை பதினாறு கைகளைப் பெற்றதாக ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இத்தல வரலாறுகள் அனைத்தும் இங்கு சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. குங்கிலியக் கலய நாயனாரின் மகன் இறந்து விடுகிறான். இதுவும் இறைவன் செயல் என்று அவனது ஈமக் கடன்களை முடிக்கச் செல்கிறார் நாயனார்.

அப்போது விநாயகர் அசரீரியாக, இத்தலத்தில் உள்ள நாக கன்னிகை தீர்த்தத்தில் பிள்ளையை மூழ்கி எடுத்தால் உயிர் பெற்று எழுவான் என்கிறார். அதன்படி செய்ய பிள்ளை பிழைக்கிறது. இவ் வினாயகர் இன்றும் பிணம் மீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் இங்கு எழுந்தருளி இருக்கிறார். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் இறைவன் திருத்தாடகையீச்சரத்து மகாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என்றும் குறிப்புகள் காணப்படுகிறது.

முதற் குலோத்துங்கச் சோழன் கல்வெட்டில் அம்பிகையின் பெயர் பெரிய நாச்சியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள முருகன் மேல் அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். சம்பந்தர் தேவாரம் பாடி இத்தல இறைவனை வேண்டினால் நம் பாவங்கள் கரையும், திருமணத்தடை நீங்கும். ஞானம் அருள்வார். சகலவிதமான நோய்களும் தீரும் என்பது நிலவும் நம்பிக்கை.

படங்கள்: ஜி.ஏ.பிரபா

The post அருள்மணம் கமழும் அருணஜடேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Arulmanam Kamalum Arunajateswara ,Kunkum ,Tanjai Tiruppanandal ,Earth ,Arulmanam Kamalum Arunajateswarar ,
× RELATED மண்ணீரல் குறைபாடு… உஷார்!