*நடிகர் சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டு பிரசாரம்
திருமலை : ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம் தேதி சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். இவரது வெற்றிக்கு துணையாக இருக்கும் விதமாக தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் பிரபல நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே ரூ.5 கோடி ஜனசேனா கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: தாயின் வயிற்றில் கடைசியாக பிறந்தாலும், அனைவருக்கும் நல்லது செய்யும் விஷயத்தில் பவன்தான் முதலில் முன்வருவான். எனது தம்பி பவன் கல்யாண் தன்னை விட மக்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர். தனது தம்பி சினிமா துறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டாலும், அரசியலுக்கு அவர் முழு விருப்பத்துடன் வந்துள்ளார். இந்நிலையில் எந்த தாயும் தன் மகன் குறித்து மர்ம நபர்கள் பேசும் வார்த்தைகளை கேட்டு மனம் உடைந்து போவார்கள். அதுபோல்தான் தன் தம்பியை விமர்சிப்பவர்கள் குறித்து எனது தாயும் கலங்கினார்.
ஆனால் நான் என் அம்மாவிடம் பவன் கல்யாணை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், அவன் பல தாய்மார்களுக்காகவும், அவர்களின் பிள்ளைகளின் நலனுக்காக நடக்கும் போருக்கு முன் நமது வலி பெரிதல்ல என கூறினேன். பித்தாபுரத்தில் பவன் கல்யாணுக்கு ஜனசேனாவுக்கு கண்ணாடி கிளாஸ் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பவன் கல்யாண் வெற்றி பெற்றால் உங்கள் உரிமைக்காக ராணுவ வீரனை போன்று உங்களுடன் நிற்பார் ஜெய் ஹிந்த்.
இவ்வாறு சிரஞ்சீவி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள ஜன சேனா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி சொல்லவில்லை. இது தற்போது புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அனகாப்பள்ளியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.எம்.ரமேஷ் மற்றும் கைகலூரில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காமினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு சிரஞ்சீவி தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் appeared first on Dinakaran.