×

சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்கக்கோரி 3 ஊராட்சி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

நாகப்பட்டினம்,மே8: பனங்குடி சிபிசிஎல் நிறுவனம் காலதாமதம் இன்றி பணிகளை தொடங்க வலியுறுத்தி 3 ஊராட்சி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் உள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ரூ.31 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய கிராமங்களில் இருந்து 620 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்திய நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டத்தின் படி உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் சிபிசிஎல் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கடந்த 7வது நாளாக தொடர்ந்து பனங்குடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் (6ம் தேதி) டிஆர்ஓ பேபி தலைமையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து சட்டி ஏந்தி நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சிபிசிஎல் நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தி இதுவரை விரிவாக்க பணிகளை தொடங்கவில்லை. இதனால் நிலத்தை கொடுத்து சாகுபடி செய்ய முடியாமல் இருக்கும் விவசாயிகள், வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து பனங்குடி சிபிசிஎல் நிறுவனம் எதிரே நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பந்தல் அமைத்து பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய 3 ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் சிபிசிஎல் நிறுவனம் உடனே பணிகளை தொடங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

உண்மையான கூலி விவசாயிகளை கணக்கிட்டு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு சட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு தரப்பை சேர்ந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கிய பின்னர் சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பை சேர்ந்த விவசாயிகள் நிலம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டால் சிபிசிஎல் நிறுவனம் காலதாமதம் இன்றி பணிகளை தொடங்க வேண்டும் என கோரி வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் இரண்டு இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பனங்குடி சிபிசிஎல் நிறுவனம் எதிரே பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி நடந்த தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஆர்டிஓ அரங்கநாதன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் பணிகள் தொடங்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

The post சிபிசிஎல் நிறுவனம் பணிகளை தொடங்கக்கோரி 3 ஊராட்சி பொதுமக்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : CBCL ,Nagapattinam ,Panangudi CBCL ,CPCL ,Union Government Public ,Panangudi ,Nagore ,Dinakaran ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...