×

சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் எதிரொலி: பூங்காக்களுக்கு அழைத்து வர இனி நாயின் வாயை மூடணும்..!தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை: சிறுமியை நாய் கடித்த சம்பவம் எதிரொலியாக, சென்னையில் உள்ள பூங்காக்களில், கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், இவற்றை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் வகையை சேர்ந்த நாய்கள் கடித்து குதறியது.

இதில் சிறுமி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும் என்றும் முழு மருத்துவ செலவையும் மாநகராட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடைப்பயிற்சி செல்வோர் பலர் தங்களது வளர்ப்பு நாய்களை கூட்டி வரும் நிலையில் பூங்காக்களுக்கு செல்லவே நடைப்பயிற்சி செல்வோர் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமியை கடித்த நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சம்பவம் நடைபெற்ற பூங்கா பகுதியில் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.

* ஒவ்வொரு உரிமையாளரும் பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்லலாம்.

* பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணியும் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதி மூடப்பட்டிருக்க வேண்டும்.

* நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும்.

* செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

* தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது கட்டுப்படுத்தப்படும்.

* பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.

* இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.

* செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் குடிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

* பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதற்ற உணர்வு ஏற்படும். இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குகளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.

* வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும்.

* அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.

* விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு. இருப்பிடம். தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று முதல் சென்னையில் உள்ள பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து செல்வதில் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* விதிகளை மீறும் வளர்ப்பு நாய்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வரும்போது, கழுத்தில் சங்கிலியால் கட்டி அதனை உரிமையாளர் கையில் பிடித்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்கும் வகையில் ‘மசூல்’ என்று அழைக்கப்படும் கவசத்தையும் கண்டிப்பாக நாயின் முகத்தில் அணிவித்திருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறி நாய்களை யாராவது தெருக்களில் திரியவிட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொது மக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என்றார்.

The post சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் எதிரொலி: பூங்காக்களுக்கு அழைத்து வர இனி நாயின் வாயை மூடணும்..!தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை...