×
Saravana Stores

போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு: கணக்கெடுப்பு பணி தொடங்கியது

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க தற்போது, சென்னையின் பல்வேறு சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதன் காரணமாகவும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக முக்கிய சாலைகளில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்கள், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அண்ணா சாலை மற்றும் மத்திய கைலாஷ் சந்திப்பில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி சாலையில் ‘யு’ வடிவ மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில், பேருந்து என பொது போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னையின் முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, அண்ணாசாலை – மத்திய கைலாஷ் வரையிலான 3 கி.மீ சர்தார் படேல் சாலை, பாந்தியன் சாலை – கூவம் இடையேயான எத்திராஜ் சாலை (0.72 கி.மீ), கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை – அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரையிலான கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை (1.4 கிமீ), நெல்சன் மாணிக்கம் சாலை – வள்ளுவர் கோட்டம் சாலை டேங்க் பண்ட் சாலை (1.1 கிமீ), அண்ணா சாலை – பாந்தியன் சாலை, கிரீம்ஸ் சாலை, (1.3 கிமீ), சர்தார் படேல் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்துவது, அதில் உள்ள கட்டிடங்களை அகற்றுவது, அந்த கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவது, விரிவாக்கத்திற்கு அகற்றப்படும் மரங்கள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபிறகே, சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

முதற்கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகளில் ஆய்வு பணி தொடங்கியுள்ளது. இதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, லட்டிஸ் பாலம் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலை ஓரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 4 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்,’’ என்றனர்.

 

The post போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு: கணக்கெடுப்பு பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் குப்பை கொட்டும்...