×

திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஸ்டாலின் என்றால் உழைப்பு… செயல்… என நிரூபித்து காட்டியுள்ளதாக பெருமிதம்: காணொலியில் பேச்சு

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவு பெற்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி காணொலியில், ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு… செயல்…’ என நிரூபித்து காட்டியுள்ளதாக பெருமிதத்துடன் முதல்வர் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைப்பதையொட்டி காணொலியில் முதல்வர் பேசியதாவது:

வணக்கம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் – உங்கள் நல்லாதரவையும், நம்பிக்கையையும் பெற்று, நம்முடைய மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் மே-7. இந்த மூன்றாண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதற்கு தினந்தோறும், பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதைவிட, பயனடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு.

* மகளிர் உரிமை திட்டம்: இந்த ஆயிரம் ரூபாய் இருக்கிறது. வேலைக்கு போனாலும், போகாவிட்டாலும் நம்ம பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும் ஸ்டாலின் எங்களுக்கு மகனாக கொடுக்கிறார்.

* சுய உதவி குழுவினருக்கான திட்டங்கள்: சுய உதவி குழுவினால் முன்னேறி இருக்கிறோம் நாங்கள். 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் தான் சம்பளம் வாங்கினோம். இன்றைக்கு எனக்கு மட்டும் மாதம் 15 ஆயிரத்திற்கு மேல் வருமானம் வருகிறது. நினைத்துப் பாருங்கள் 1 லட்சம் கடன் வாங்கினால் வட்டி எவ்வளவு போடுகிறார்கள். நம்முடைய வங்கி கணக்கில் பணம் போடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் பணத்தை கட்டினால், மீண்டும் அழைத்து கடன் கொடுக்கிறார்கள்.

* தோழி விடுதி திட்டம்: அரசு, மகளிருக்காக விடுதி வசதி திட்டத்தை செய்துகொடுப்பார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. பெண்களை, வேலைக்கு அனுப்புவதே அரிது. வேலைக்கு செல்லும்போது பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் இந்த திட்டம் மிகவும் பெரிய
விஷயம்.

* கட்டணமில்லா பேருந்து பயணம்: நான் சில நேரங்களில் ஜன்னலோரங்களில் அமர்ந்து செல்லும்போது அவருக்கு (முதலமைச்சருக்கு) மனதில் இருந்து நன்றி கூறியுள்ளேன். ஒரு தாயை போல நமக்காக இவர் எந்த அளவுக்கு யோசித்து இருக்கிறார் என்று மனமார்ந்த நன்றி கூறிக்கொள்கிறேன்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: எனது மகள் காலையில் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பாள். இப்போதெல்லாம் காலையில் உணவை விரும்பி சாப்பிடுகிறாள். அதுவும் சிறுதானிய உணவு வழங்குவதால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் அதிகமாக கிடைக்கிறது.

* சுய தொழில் புரிவதற்கான கடனுதவி திட்டம்: நாங்கள் இதுவரைக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தோம். ஆட்டோ முதன்முதலில் வாங்கும்போது ஒரு முதலாளியாக மாறியுள்ளோம்.

* நான் முதல்வன் திட்டம்: எனது அப்பா நான் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கேன்சரால் உயிரிழந்துவிட்டார். அதற்குப்பிறகு எனது அம்மா தான் எனது தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டார். முதலமைச்சரின் கனவு திட்டமாக தான் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இன்றைக்கு அந்த கனவு நனவாகி விட்டது என்று நினைக்கிறேன். இந்த திட்டங்கள் எல்லாம் தான் நாளைய இந்தியாவை வடிவமைக்கும் என்று நான் நினைக்கிறேன்.

* புதுமைப் பெண் திட்டம்: என்னுடைய அப்பா மிகவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது மிகவும் உதவியாக இருக்கிறது. அந்த உதவித்தொகையை வைத்து தான் துணிமணிகளை வாங்கி வருகிறோம்.

* திருநங்கையர்களுக்கான நலத்திட்ட உதவிகள்: எங்களுக்காக முதல்வர் 3 சென்ட் இடம் கொடுத்து ஒரு தனி வீடும் கட்டி கொடுத்துள்ளார்.

* குடும்ப தலைவிகளுக்கு புதிய ரேஷன் கார்டு: என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 8 வருடங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் கார்டு மற்றும் அடையாள அட்டைகளை எடுத்து சென்று விட்டார். ஐந்தே நிமிடத்தில் குடும்பத்தலைவர் என்ற அவருடைய பெயரை நீக்கிவிட்டு, என்னுடைய பெயரையும், மகனின் பெயரையும் பதிவு செய்து புதிய ரேஷன் கார்டு கொடுத்தார்கள்.

* மாற்றுத் திறனாளிகளுக்கான் நலத்திட்ட உதவிகள்: பீச் சாலையில் செல்லும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும். கடற்கரையில் காலை நனைக்க வேண்டும், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசையாக இருக்கும். அதற்கு ஒரு நிரந்தர தீர்வாக மரத்திலான பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று பயனடைந்தவர்கள் பாராட்டுகிறார்கள். ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு – உழைப்பு – உழைப்பு’ என்று சொன்னார் எங்களையெல்லாம் உருவாக்கிய அன்புத்தலைவர் கலைஞர்.

இந்த மூன்றாண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல் – செயல் – செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன். எப்பொழுதும் நான் சொல்வது இது எனது அரசு அல்ல. நமது அரசு. அந்த வகையில் நமது அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி, மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது, நம்பிக்கையோடு முன்செல்கிறேன்.பெருமையோடு சொல்கிறேன். தலைசிறந்த மூன்றாண்டு, தலைநிமிர்ந்த தமிழ்நாடு.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஸ்டாலின் என்றால் உழைப்பு… செயல்… என நிரூபித்து காட்டியுள்ளதாக பெருமிதம்: காணொலியில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK Govt ,Stalin ,Chennai ,DMK government ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED திமுக அரசு செய்த பணிகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி: கமல்ஹாசன் அறிக்கை