×

ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை, செயின்ட் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்தவர் பரசுராமன் (53). தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (49). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பரசுராமன், கடந்த 5ம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு சுற்றுலா சென்றுவிட்டார். அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு உறங்குவதற்காக படுக்கைக்குச் சென்றார். இதனையடுத்து நள்ளிரவில் எதார்த்தமாக, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை தனது செல்போனில் அவர் பார்த்தார். அந்த காட்சியில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவது பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பரிமளா, உடனே தனது உறவினரான ஆவடி, பூம்புழல் நகரைச் சேர்ந்த சாலமன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் உடனே இரவோடு இரவாக வீட்டுக்குச் சென்று பார்த்தார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டிருந்ததையடுத்து அவர் உடனே பரசுராமனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்து சுமார் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆவடி அருகே பரபரப்பு வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Kovilpatagai ,Parasuraman ,St. Francis ,Parimala ,Avadi ,Dinakaran ,
× RELATED மின்வாரிய அலுவலர் மீது தாக்குதல் சிறுவன் உட்பட 3 பேர் கைது