×

என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி

நெல்லை: என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது என நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த 4-ம் தேதி அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலரது பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஜெயகுமார் தனசிங் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன் விசாரணை மேற்கொண்டார். நெல்லை வண்ணாரப்பேட்டை ஜிஆர்டி ஹோட்டலில் கே.வி.தங்கபாலுவிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் 45 நிமிடங்களுக்கு பிறகு விசாரணை நிறைவு பெற்றது. பின்னர், கே.வி.தங்கபாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காவல்துறை கேட்ட அனைத்து கேள்விக்கும் விளக்கம் அளித்தேன். விசாரணை சரியான முறையில் நடைபெற்றது. 3 நாட்களுக்கு முன் காவல் ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டார், அவர் கேட்டுக்கொண்டதால் விசாரணைக்கு வந்தேன். எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்போடு கலந்து கொள்வேன். என்னை பற்றி வெளி வரும் செய்திகள் அனைத்தும் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

The post என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : K. V. ,Tangabalu ,Nella ,Nella Congress ,Executive ,Jayakumar ,K. V. Tangabalu ,Nella East District Congress ,President ,administrator ,
× RELATED கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில்...