×

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்; 10 பேர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 10 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலைவலி, காய்ச்சல், வலிப்பு, மயக்கம், கை, கால்களில் தளர்வு ஆகியவற்றுடன் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவை மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்பதால் முதலில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது அவர்களுக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பூனாவில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் நடத்திய பரிசோதனையிலும் இந்த நோய் உறுதி செய்யப்பட்டது. க்யூலெக்ஸ் என்ற கொசுவின் மூலம் தான் இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுகிறது. மனிதனில் இருந்து மனிதனுக்கு நேரடியாக இந்த நோய் பரவாது. இந்த நோய் பாதித்த விலங்குகள், பறவைகளை கடித்த கொசுக்கள் மனிதனை கடிக்கும்போது தான் இது பரவுகிறது.

கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் 10 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த 2 பேர் நேற்று இறந்தனர். இவர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் காணப்பட்டன. வெஸ்ட் நைல் காய்ச்சல் காரணமாகத்தான் இவர்கள் இறந்தார்களா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

The post கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்; 10 பேர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kozhikode ,Malappuram ,Kerala State ,
× RELATED கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்...