நாமக்கல்: தகாத உறவு காதலியின் கணவரை கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த அதிமுக பஞ்சாயத்து தலைவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46), தொழிலாளி. இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், பழனிவேல் கடந்த 2ம் தேதி ஆயிபாளையம் அருகே, ரயில்வே பாலத்தின் கீழ் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வெண்ணந்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். அதில் பழனிவேலின் மனைவி செல்விக்கும், ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த கந்தசாமி (45) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. செல்வியை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கொலையுண்ட பழனிவேலுக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டைக்காக பஞ்சாயத்து பேச வீட்டுக்கு வந்த கந்தசாமிக்கும், செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பழனிவேல், 2 பேரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, கணவனை கொலை செய்ய செல்வி முடிவு செய்தார். அதன்படி, காதலன் கந்தசாமி மூலம், கடந்த 2ம் தேதி ஆயிபாளையம் அருகே ரயில்வே பாலத்திற்கு வரவழைத்து, மது அருந்த வைத்து, சேலம் நெத்திமேட்டை சேர்ந்த ரவி (எ) குணா (48) என்பவருடன் சேர்ந்து, பழனிவேலை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து, அங்கிருந்து இருவரும் தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கந்தசாமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, வீட்டுக்கு செல்ல ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று, கந்தசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது appeared first on Dinakaran.