– வ.மீனாட்சி சுந்தரம், உலகம்பட்டி.
கருடன் வேதத்தின் வடிவம். பகவானான பரவாசு தேவனையே தாங்கும் பாக்கியம் பெற்றவர். ‘‘பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்’’ என்று பகவான் கண்ணன் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார். வேத மயமான மந்திரங்களைச் சொல்லி, வேதங்களால் துதிக்கப்படும் தெய்வத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கும்போது, வேத வடிவான கருடன் வராமல் இருப்பாரா? வருவார்! கருடனைப்பற்றிய விரிவான வரலாறு தகவல்கள், வியாச பாரதத்தில் இடம்பெற்றுள்ளன.
விதி என்ன செய்யும்?
– வேலன்,திருச்சி.
விதி விளையாடும். இதுதான் எல்லார் வாழ்விலும் நடக்கிறது. அதற்காக விதியே என்று இருக்க முடியுமா? இருக்க முடியாது. விதியை எதிர்கொள்வதற்கு தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் வேண்டும்.காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கின்றேன் என் கால் அருகே வாடா உன்னை சற்றே மிதிக்கின்றேன் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. நமக்கு நம்பிக்கையையும் நல்ல ஊக்கத்தையும், நேர்மறைச் சிந்தனையும் தருகின்ற வார்த்தை. ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவன் விதியோடு விளையாடுகிறான். நம்பிக்கை இல்லாதவனோடு விதி விளையாடுகிறது.
திருமண நாள் குறிக்கும்போது எப்படி கடைப்பிடிக்க வேண்டும்?
– கிருஷ்ணன், மதுரை.
நாள்கள் சில குற்றம் குறையுடன் தான் இருக்கும் குறையற்ற நாள்களை கண்டுபிடிக்கவே முடியாது. அதனால் சாதாரண குறைகள் இருந்தாலும் அந்த நாளில் சுப வேளைகளை தேர்ந்தெடுத்து நற்காரியங்களை செய்யலாம். கட்டுப்பட்டவை என்பதை உணர வேண்டும். முடிந்த வரை நாள் நேரம் பாருங்கள். தவிர்க்க முடியாதபடி நேரம் சரியில்லாமல் இருந்தால், இந்த பாடலை மனமுருகிக் கூறிவிட்டு செயலை செய்யுங்கள். வெற்றியாகும். நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
இடி இடிக்கும்போது, அர்ஜுனன் தலை பத்து எனப் பலமுறை கூறுகிறார்களே! அர்ஜுனனுக்கும் பத்து தலைக்கும் தொடர்பு உண்டா?
– ஆர். நாராயணசாமி. பெங்களூர்-76.
தொடர்பு உண்டு. காண்டவ வனத்தைக் கண்ணன் துணையோடு அர்ஜுனன் எரிக்க முயன்றபோது, தேவேந்திரன் இடி-மழை-மின்னல் ஆகியவைகளை அனுப்பி, அர்ஜுனனைத் தடுத்தார். ஆனால் அந்த இடி-மழை-மின்னல் எனும் தடைகளைத் தாண்டிக் காண்டவ வனத்தை எரி்த்து வெற்றி கொண்டான் அர்ஜுனன். அந்த அர்ஜுனனுக்குப் பத்துப் பெயர்கள் உண்டு. தனஞ்ஜயன், விஜயன், சுவேதவாகனன், கிரீடி, பீபத்சு, சவ்யசாசி, அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, பார்த்தன்-எனும் அந்தப் பத்துப் பெயர்களையும் இடிஇடிக்கும் போது கூறினால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்காகவே, அந்தப் பத்துப் பெயர்களையும் சொல்லுமுகமாக, இடிஇடிக்கும் போது, ‘‘அர்ஜுனன் தலைபத்து’’ என்று கூறுகிறார்கள்.
மூல ஸ்தானத்தில் உள்ள இறைவனுக்கு உள்ள சக்தி, கொடிக்கம்பத்தில் உள்ளது என்று கூறுவது சரியா?
– வண்ணை கணேசன். சென்னை 600110.
சரிதான். ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட மூலஸ்தானப் பீடத்தின் அடியில் நவரத்தினங்கள் மந்திர யந்திரங்கள் ஆகியவை இருக்கும். ‘உருவேறத் திருவேறும்’ என்ற வாக்கின்படி, மூலஸ்தானத்தில் சொல்லப்படும் மந்திரங்களின் ஆற்றல் அதிர்வலைகள் அப்படியே, மூலஸ்தானப் பீடத்தின் அடியில் இருக்கும் நவ ரத்தினங்கள் மந்திர யந்திரங்கள் ஆகியவற்றில் சேரும். அவ்வாறு சேரும் அந்த சக்தியை ஆற்றலை அதிர்வலைகளை, கொடிமரம் (துவஜ ஸ்தம்பம்) இழுத்துத் தனக்கு அடியில் வைத்துக் கொள்ளும். கொடி மரத்தின் அடியில் நாம் தலைவைத்து வணங்கும் போது, அங்குள்ள அதிர்வலைகள் தலை வழியாக நம் உடலுக்குள் பாய்கின்றன; நலங்கள் செய்கின்றன. இதன் காரணமாகவே கோவில்களின் உள்ளே எங்கும் விழுந்து வணங்கக்கூடாது என்ற ஆகமங்கள், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும் என்று கூறி இருக்கின்றன.
அருள்ஜோதி
The post கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்? appeared first on Dinakaran.