×

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின் முக்கிய சந்திப்புகளில் வழிகாட்டி பலகைகள் அமைப்பு

ஊட்டி : சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சுற்றுலா தலங்களுக்கு சென்று வர வசதியாக ஊட்டி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதலாக தற்காலிக டிஜிட்டல் வழிகாட்டி பலகைகள் போக்குவரத்து போலீசார் அமைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்படுகிறது.

குறிப்பாக அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவில் வருகை புரிகின்றனர். சுமார் 80 சதவீதம் சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் வருகை புரிகின்றனர். இதனால் வழக்கமான நாட்களை காட்டிலும், சீசன் சமயங்களில் ஊட்டி நகரில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

இதனால் உள்ளூர் மக்கள் பாதிப்படைகின்றனர். வரக் கூடிய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வழி தெரியாமல் நகரை சுற்றி சுற்றி வருகின்றனர். கூகுள் மேப் பயன்படுத்தினாலும் சீசன் சமயத்தில் மாற்றி அமைக்கப்படும் போக்குவரத்து மாற்றங்களால் சிரமமடைகின்றனர். வழிகேட்பதற்காக ஆங்காங்கு நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ஊட்டி நகர போக்குவரத்து போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் சுற்றுலா தளங்களின் பெயர்கள், செல்லும் திசை மற்றும் தொலைவு குறித்த விவரங்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகள் அமைத்து வருகின்றனர். இதன் மூலம் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக செல்ல முடியும் போக்குவரத்து நெரிசலும் சற்று குறையும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

The post சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின் முக்கிய சந்திப்புகளில் வழிகாட்டி பலகைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty, Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை...