×
Saravana Stores

கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் மிதி படகு சவாரி செய்து குதூகலம்

ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் ஒரு வாரத்திற்கு பின்பு கடந்த 2 நாட்களாக மிதி படகு சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஏரியில் படகு இல்லம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. இதனிடையே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி நகரில் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஊட்டி படகு இல்லத்தில் கடந்த வாரம் சனிக்கிழமையில் இருந்து 19ம் தேதி வரை 7 நாட்கள் மிதி படகுகள் இயக்கப்படவில்லை. குழுவாக வந்திருந்தவர்கள் மட்டும் மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். நேற்று முன்தினம் மாலை முதல் மழை குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதி படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக வார விடுமுறை நாளான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பலத்த காற்று வீசிய நிலையில், ஏரி கரையோரங்களில் உயர்ந்த மரங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கரையோரங்களில் படகுகளை இயக்க வேண்டாம் என மிகுந்த எச்சரிக்கையுடன் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பலத்த காற்று காரணமாக படகு இல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் காற்றில் இழுந்து செல்லப்பட்டு தொலை தூர பகுதிகளில் கரை ஒதுங்கியது. இதையடுத்து படகு இல்ல ஊழியர்கள் அதனை இழுத்து வந்தனர். இதேபோல ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

The post கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் மிதி படகு சவாரி செய்து குதூகலம் appeared first on Dinakaran.

Tags : Ooty lake ,Ooty ,Ooty Boat House ,Ooty Central Bus Station ,Ooty… ,Dinakaran ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்