கூடலூர், மே 7: கூடலூர் அருகே காட்டு யானைகளிடம் வாழைகளை பாதுகாக்க புதிய முயற்சியாக, உயரமான மரங்களில் பரண் அமைத்து விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர். கூடலூர் சுற்றுவட்ட பகுதி விவசாயிகள் நேந்திரன் வாழை விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் நேந்திரன் வாழைத்தார்கள் கேரளாவிற்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
குறிப்பாக காட்டு யானைகளால் வாழை விவசாயத்துக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கடுமையான தண்ணீர் உணவு தட்டுப்பாடு காரணமாக யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராம பகுதிகளுக்குள் வருகின்றன. இந்த யானைகளிடம் இருந்து தங்களது விவசாய பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் யானைகளை கண்காணித்து வாழை தோட்டங்களில்.
தங்கும் விவசாயிகளுக்கு காட்டு யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த அச்சம் காரணமாக ஒரு சில விவசாயிகள் மரங்களில் பரண் அமைத்து யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் புளியம்பாறையை அடுத்த கோழிக்கொல்லி பகுதியில் வசிக்கும் விவசாயி சுனில் பாபு தனது தோட்டத்தில் ஏராளமான நேந்திரன் விவசாயம் செய்துள்ளார்.
தற்போது அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் வன விலங்குகளிடமிருந்து வாழை விவசாயத்தை பாதுகாக்க தோட்டத்தை ஒட்டி உள்ள உயரமான மரத்தில் பரண் அமைத்து இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இதேபோல் இப்பகுதியில் மேலும் சில விவசாயிகளும் மரங்களில் பரண் அமைத்து வாழை தோட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயரமான பரண்களிலிருந்து தொலைதூரத்தில் யானைகள் வருவதை கண்காணிக்க முடியும் என்றும், அவ்வாறு தோட்டங்களை ஒட்டி வரும் யானைகளை விரட்டுவதற்கு இந்த பரண்கள் உதவியாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
The post கூடலூர் அருகே காட்டு யானைகளிடம் வாழைகளை பாதுகாக்க மரத்தில் பரண் அமைத்து விவசாயிகள் காவல் appeared first on Dinakaran.