- நெல்லி காங்
- யூனியன்
- நெல்லை
- முன்னாள் மத்திய அமைச்சர்
- தனுஷ்கோடி ஆதித்தன்
- நெல்லை மாவட்ட காங்கிரஸ்
- ஜனாதிபதி
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- ஜெயக்குமார் தனசிங்
- வெக்டியன்விளை
- கரிச்செதுபுதூர்
- நெல்லை மாவட்டம்
- நெல்லை காங்கிரஸ்
- முன்னாள்
- அமைச்சர்
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், அரசு மருத்துவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம், திசையன்விளை, கரைச்சுத்துபுதூரை சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) கடந்த 2ம் தேதி மாயமானார். அதற்கு அடுத்த நாள் அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) உவரி காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை எனவும், கடைசியாக வீட்டில் இருந்து செல்வதற்கு முன் மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது எனவும் புகார் அளித்தார்.
இந்நிலையில் 4ம் தேதி அதே பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ஜெயக்குமார் உடலை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். ஜெயக்குமார் எழுதியதாக மேலும் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயக்குமார் தனக்கு பணம் தர வேண்டிய முக்கிய நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். கடிதங்களில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ள நபர்களின் செல்போன் எண்களை போலீசார் தொடர்பு கொண்ட போது பலர் ‘சுவிட்ச் ஆப்’ செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஜெயக்குமாருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று மேலும் ஒரு தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜெயக்குமார் தனசிங்கின் உறவினரும், நாகர்கோவில் அரசு மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை மருத்துவருமான செல்வகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின் நெல்லை, பாளைங்கோட்டை, ஜோதிபுரத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டிற்கும் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மகனுடன் மோதல்? ஜெயக்குமார் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு தொழில்களை எடுத்து நடத்தி வந்துள்ளார். இதில் சிலரிடம் பணத்தை ஜெயக்குமாரின் மகன் கருத்தையா வாங்கி விடுவார். ஆனால் அதனை அவரது தந்தையிடம் கூற மறந்து விடுவாராம். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே வருத்தம் இருந்துள்ளதாகவும், மகளின் கணவரை (மருமகனை) நம்பி செயல்படும் அளவிற்கு அவர் இருந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் முக்கியமான தடயம் ஒன்று சிக்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் ஜெயக்குமாரின் மரணத்திலுள்ள சந்தேக முடிச்சுகள் அவிழும் என போலீசார் தெரிவித்தனர்.
* செல்போன் மாயம்
ஜெயக்குமாரின் கார் அவரது தோட்டத்தில் மீட்கப்பட்டது. ஆனால் அவரது இரண்டு செல்போன்களை போலீசார் இதுவரை மீட்கவில்லை. அவர் இறந்து கிடந்த இடத்தில் ஆதார், ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் அட்டை கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது.ஜெயகுமாரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது’ என்றார்.
* காங். அலுவலகத்தில் விசாரணை 30 பேருக்கு போலீஸ் சம்மன்
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தனிப்படையினர் திசையன்விளையிலுள்ள காங்., அலுவலகத்திற்கு வந்து சென்ற கட்சியினர் மற்றும் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடம் தனித்தனியாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் ஓய்வெடுப்பதற்காக தங்கும் தனியார் கட்டிட ஊழியர்களிடமும், அவரது தோட்டத்து ஊழியர்கள், காவலாளிகள், அவர் அடிக்கடி சென்று வரும் கடைகளின் உரிமையாளர்கள், நண்பர்கள், இரண்டு டிரைவர்கள், அவர் குடியிருந்து வரும் தெரு மற்றும் அவரது வீட்டருகே வசித்து வருபர்கள் மற்றும் உறவினர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காங்., எம்.எல்.ஏ.,, காங்., பொறுப்பாளர்கள் உட்பட 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை துவக்கியுள்ளனர்.
* கயிற்றால் கட்டப்பட்டு உடல் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; பிரேத பரிசோதனையில் தகவல்
ஜெயக்குமார் உடலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை நடத்தினர். இதில் சில உள் உறுப்புகள் பரிசோதனைக்காக சென்னை மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பின் முதல் கட்ட அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து நெல்லை எஸ்பியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜெயக்குமார் உடலில் பெரியளவிலான காயங்கள் ஏதுவும் இல்லை எனவும் அவரது கைகள், கால்கள் வயர்கள் அல்லது கயிற்றால் கட்டப்பட்ட தடயங்கள் மிகவும் ஆழமாக உள்ளதாகவும், குரல் வளை சிறிதளவு சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதால் தீ மளமளவென்று உடலை எரித்துள்ளதாகவும் கூறப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. உள் உறுப்புகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே கொலையா? தற்கொலையா? என கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
* ஜெயக்குமாரின் கடைசி நிமிட வீடியோ வெளியாகி பரபரப்பு
ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் யாரெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து அறிய அருகே உள்ள சிசிடிவி காட்சிகள், அவரது வாகனம் வந்து சென்ற இடங்கள் என பல்வேறு பகுதி சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் ஜெயக்குமார் வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்படும் மே 2ம் தேதி இரவு திசையன்விளையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு 10 மணியிலிருந்து 10.20 மணிக்குள் சென்றுள்ளார். அப்போது அவர் வழக்கமாக அணியும் காக்கி கலரில் பேண்ட் மற்றும் வெள்ளை நிற சர்ட், ஷூ ஆகியவற்றை அணிந்திருந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பொருட்கள் தொடர்பாக விவரத்தை கேட்கிறார். வீட்டில் செடிகள் வைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் தொட்டிகளை எடுத்துப் பார்க்கிறார். எந்தவித பதற்றமும் இல்லாமல் ரிலாக்சாக கடை ஊழியருடன் பேசுகிறார். அதன் பின்னர் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்த வெளியேறிய கேபிகே ஜெயக்குமார் பின்னர் எங்கு சென்றார். வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எப்படி பிணமாக கிடந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தான் கேபிகே ஜெயக்குமாரின் கடைசி வீடியோவாக இருக்கும் என தெரிகிறது.
The post நெல்லை காங். தலைவர் மரணத்தில் தொடரும் மர்மம் முன்னாள் ஒன்றிய அமைச்சர், அரசு மருத்துவரிடம் விசாரணை appeared first on Dinakaran.