பெர்ஹாம்பூர்: பூரி ஜெகன்நாதரின் மகன் என தன்னை கூறிக் கொண்ட பிரதமர் மோடி, ‘ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசு வரும் ஜூன் 4ம் தேதியுடன் காலாவதியாகும்’ என கூறி உள்ளார். ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. இங்கு முதல் முறையாக நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி பெர்ஹாம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கனிஷியில் பேசியதாவது: பாஜவின் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒன்றிய அரசின் திட்டங்களை ஒடிசாவில் செயல்படுத்த விடாமல் பிஜூ ஜனதா தள அரசு தடுக்கிறது. ஒடிசாவில் நிறைய வளங்கள் இருந்தும் மக்கள் இன்னும் ஏழைகளாக உள்ளனர். இம்மாநிலம் அனைத்து வளர்ச்சியிலும் பின்தங்கி உள்ளது. இந்த பின்தங்கிய நிலைக்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் மாநிலத்தை ஆண்ட காங்கிரசும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிஜேடியும் இங்கு ஆட்சி செய்து கொள்ளை அடிப்பதில் மட்டும் அக்கறையுடன் இருந்துள்ளனர்.
இந்தநிலையில், ஒடிசா மக்களுக்கு பாஜ மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையின் கதிராக உள்ளது. ஒடிசாவின் மகளுக்கு (திரவுபதி முர்மு) நாட்டின் உயரிய பதவியை பாஜ தந்துள்ளது. கடவுள் பூரி ஜெகன்நாதரின் மகனாக சொல்கிறேன். ஒடிசாவிற்கு ஒடியா மொழி மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் முதல்வர் தேவை. ஒடிசாவை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற பாஜவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தற்போதைய தேர்தலுக்குப் பிறகு ஒடிசாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும். நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தள அரசு வரும் ஜூன் 4ம் தேதியுடன் காலாவதியாகும். ஜூன் 10ம் தேதி நடைபெறும் பாஜவின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
* பகல் கனவு காணும் பாஜ
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘‘ஒடிசாவில் பாஜ ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி பகல் கனவு காண்கிறார்’’ என்றார். நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய உதவியாளரான வி.கே.பாண்டியன் கூறுகையில், ‘‘ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 6வது முறையாக ஜூன் 9ம் தேதி காலை 11.30 முதல் பகல் 1.30 மணிக்குள் பதவியேற்பார்’’ என்றார்.
The post ‘பூரி ஜெகன்நாதரின் மகன் சொல்கிறேன்…’ ஒடிசாவில் ஆளும் பிஜேடி அரசு ஜூன் 4ம் தேதி காலாவதியாகும்: பிரதமர் மோடி ஆருடம் appeared first on Dinakaran.