×

அடமான நகைகளுக்கு வட்டியில்லை என கூறி மோசடி வழக்கில் சேர்க்க கோரி பாதிக்கப்பட்டவர் மனு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அடமான நகைகளுக்கு வட்டியில்லை என்று கூறி மோசடி செய்த வழக்கில், பாதிக்கப்பட்டவரை சேர்க்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை முகப்பேரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்டு லோன் என்ற நிறுவனம், நகைக் கடன் வழங்குவதாகவும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு முதல் 12 மாதம் வட்டி இல்லை என்றும் விளம்பரம் செய்திருந்தது. இதை நம்பி பலர் தங்கள் நகைகளை வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தாங்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை மோசடி செய்ததாக, அடமானம் வைத்தவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு புகார்தாரராக சேர்க்கக் கோரி, முகப்பேரை சேர்ந்த ஜூடி இன்பண்ட் என்பவர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.வேலுமணி, வி.மலர்விழி ஆகியோர் சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், மனுதாரர் பல கட்டங்களில் 716 கிராம் நகைகளை கிராமுக்கு 3,200 ரூபாய்க்கு அடமானம் வைத்து அதன் மூலம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 894 ரூபாய் கடன் பெற்றுள்ளார். தற்போது இந்த நகைகளின் மொத்த மதிப்பு 48 லட்சத்து 11 ஆயிரத்து 520 ரூபாய். இதனால் மனுதாரருக்கு 27 லட்சத்து 74 ஆயிரத்து 626 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரது புகாரையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்கும்படி பொருளாதார குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு இன்று நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

The post அடமான நகைகளுக்கு வட்டியில்லை என கூறி மோசடி வழக்கில் சேர்க்க கோரி பாதிக்கப்பட்டவர் மனு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,A.R.D. ,Jewellers' ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...