×

மோடியின் கீழ்த்தரமான பிரசாரத்தால் பாஜவுக்கு படுதோல்வி காத்திருக்கிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: பிரதமர் மோடியின் கீழ்த்தரமான அரசியல் பிரசாரத்தால் பாஜவுக்கு படுதோல்வி காத்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் ஒளிமயமாக மாறி வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் இட்டுக்கட்டி திரித்து பேசி வருகிறார்கள். இதன்மூலம் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக தொடர்ந்து மீறி வருகிறார். மதத்தின் அடிப்படையில் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது.

ஆனால், பிரதமரின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடம் நியாயமான, பாரபட்சமற்ற அணுகுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணையம் என்பது மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடையே பிளவை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி குளிர்காய நினைக்கிற கீழ்த்தரமான அரசியல் பரப்புரையின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பாஜவுக்கு தோல்வி காத்திருக்கிறது.

இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடியின் பாசிச, சர்வாதிகார 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியின் பிடியிலிருந்து 140 கோடி இந்தியர்களும் விடுவிக்கப்படுவது உறுதியாகி வருகிறது. இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற பொற்காலத்தை அமைக்க ராகுல்காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணமும், பிரசாரமும் பெரும் துணையாக இருக்கப் போகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மோடியின் கீழ்த்தரமான பிரசாரத்தால் பாஜவுக்கு படுதோல்வி காத்திருக்கிறது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,CHENNAI ,Selvaperunthagai ,India ,Tamil Nadu ,Congress ,Selvaperunthakai ,
× RELATED கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத...