- சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள்
- சென்னை
- சென்னை மாநகராட்சி
- ஆணையாளர்
- ராதாகிருஷ்ணன்
- சென்னை மாநகரப் பள்ளிகள்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 87.13 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர், என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விவரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1.2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2023-24ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள்.
இதில் 1,750 மாணவர்கள் (81.78%) மற்றும் 2,605 (91.15%) மாணவியர் என மொத்தம் 4,355 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.13% ஆகும். (கடந்த 2022-23ம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.86%.) பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்: வணிகவியல் பாடப்பிரிவில் 16, கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 14, பொருளாதாரம் பாடப் பிரிவில் 12, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 9, கணக்கியல் பாடப்பிரிவில் 2, புவியியல் பாடப்பிரிவில் 1, கணிதப் பாடப்பிரிவில் 1, விலங்கியல் பாடப்பிரிவில் 1 என 56 மாணவ, மாணவியர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள பள்ளிகள்: எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கொளத்தூர்-சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 575 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 573 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் மற்றும் 600 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப் பள்ளி, எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் பெற்று 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேர்ச்சி சதவீத அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள பள்ளிகள்: நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், அப்பாசாமி தெரு-சென்னை மேல்நிலைப் பள்ளி 98 சதவீத தேர்ச்சியுடன் 2ம் இடத்தையும், திருவான்மியூர்-சென்னை மேல்நிலைப் பள்ளி 96.43 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும், புல்லா அவென்யூ-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95.05 சதவீத தேர்ச்சியுடன் 4ம் இடத்தையும், கொளத்தூர்-சென்னை மேல்நிலைப் பள்ளி 94.16 சதவீத தேர்ச்சியுடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.
மதிப்பெண்கள் அடிப்படையில் 42 மாணவ, மாணவியர் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 210 மாணவ. மாணவியர் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 467 மாணவ, மாணவியர் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்தார்.
The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100 appeared first on Dinakaran.