×

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்; அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7,534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் தேர்வில் பங்கேற்றனர். சென்னை நகரில் 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுடன், பிளஸ்2 தேர்வுக்கு 83 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தபடி மே 6ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியதாவது;

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tnresults.nic.in மற்றும், http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்; அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்! appeared first on Dinakaran.

Tags : PLUS 2 ,MINISTER ,ANDIL MAHESH ,Chennai ,Plus 2 general election ,Tamil Nadu ,Puducherry ,2 ,Anil Mahesh ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்...