×
Saravana Stores

ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால் வாலிபரை கடத்தி சிறை வைத்த கும்பல்: 5 பேர் கைது

கிருஷ்ணகிரி: ரூ.34 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்காததால், வாலிபரை காரில் கடத்திச்சென்று லாட்ஜில் சிறை வைத்து மிரட்டிய மாமன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவர், கருத்து வேறுபாடால் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கரடிகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனது மாமன் உறவு முறையான மாதேஷ் என்பவரிடம் பாலாஜி ரூ.34 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை குறித்த காலத்திற்குள் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து மாதேஷ், பணத்திற்கு ஈடாக பாலாஜியின் பெயரில் உள்ள 2 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை, தனது தந்தை பெயருக்கு கிரையம் செய்து கொடுக்கும்படி வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலாஜி கடந்த 1ம்தேதி வாடகை காரில் சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை நண்பர்கள் சிலருடன் காரில் பின்தொடர்ந்து சென்ற மாதேஷ், காருடன் பாலாஜி மற்றும் டிரைவர் ரித்தீஷ் ஆகியோரை கடத்திச் சென்று, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அடைத்து வைத்தார். மறுநாள் காலை, பாலாஜியை கிருஷ்ணகிரி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, மாதேஷின் தந்தை முருகேசன் பெயரில் நிலத்தை பதிவு செய்துள்ளனர். பின்னர், மாலையில் மீண்டும் பெரியாம்பட்டியில் உள்ள லாட்ஜூக்கு, பாலாஜியை அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளனர்.
அப்போது, வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காவிட்டால், கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர். பின்னர் இருவரையும் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அப்போது, பாலாஜி சேலத்தைச் சேர்ந்த தனது நண்பர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி, ரூ.45 ஆயிரத்தை சாந்தகுமார் என்பவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். காரில் வந்த கும்பல், ஒடசல்பட்டி பிரிவுரோடு அருகே, ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு, சாப்பாடு வாங்க சென்றுள்ளனர். அப்போது, பாலாஜி மற்றும் ரித்தீஷ், காவலுக்கு காரின் அருகில் நின்றிருந்த சாந்தகுமாரை கீழே தள்ளி விட்டு, காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். நேராக காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு விரைந்து சென்று, அங்கிருந்த மாதேஷ் மற்றும் சாந்தகுமார் (44), செல்வ கமல்(46), ராஜ்கமல்(36), கார்த்திக்(31) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கோவிந்தன் என்பவர் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ரூ.34 லட்சம் கடனை திருப்பி தராததால் வாலிபரை கடத்தி சிறை வைத்த கும்பல்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Maman ,Balaji ,Nakkalpatti village ,Parkur ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...