×

வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு

தேனி: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் நடக்கும். இத்திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் அங்கபிரதட்சனம், முடிகாணிக்கை செலுத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், ஆயிரம் கண்பானை எடுத்தல், அலகுகுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு கோயில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தற்காலிக கடைகள் அமைக்க ஏலம் மூலம் அனுமதி வழங்கப்படும். இதன்படி, கோயில் வளாகத்தில் ஏராளமான கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைக்கப்படும். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற 7ம் தேதி தொடங்கி வருகிற 15 ம்தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான கம்பம் நடுதல் விழா கடந்த மாதம் 17ம் தேதி நடந்தது. இதனையடுத்து கோயிலில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கோயில் வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணியுடன் வீரபாண்டி கோயிலுக்கு செல்லும் கம்பம் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

 

The post வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Veerapandi Chitra Festival ,Theni ,Veerapandi Kaumariamman Temple Chitrit Festival ,Kaumariyamman Temple ,Weerabandi ,Chitrit Festival ,Ikoil ,Veerabandi Chitra Festival ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு