திருவண்ணாமலை, மே 5: திருவண்ணாமலை மாவட்டத்தில், எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று 8 மையங்களில் நடக்கிறது. அதில், 3,768 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-2025ம் கல்வி ஆண்டின் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை இன்று (5ஆம் தேதி) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை சாஷம்மாள் வித்யா மந்திர் பள்ளி, எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளி, ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி, ஆரணி அத்திமலைப்பட்டு துலிப் இன்டர்நேஷனல் பள்ளி, ஆரணி கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பள்ளி,எஸ்கேவி இன்டர்நேஷனல் பள்ளி, விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும், மொத்தம் 3,768 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான நுழைவுச் சீட்டுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டு, பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு இன்று பகல் 2 மணி தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. ஆனாலும், பகல் 1 மணிக்குள் தேர்வு மைய வளாகத்துக்கு மாணவர்கள் வந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, நீட் தேர்வு மையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்கள், கைகடிகாரம். மூக்குத்தி கம்மல் போன்ற அணிகலன்கள் மற்றும் முழுக்கை சட்டை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மையம் வாரியாக தேர்வு எழுதும் மாணவர்கள் :
திருவண்ணாமலை சாஷம்மாள் வித்யா மந்திர் பள்ளி : 504
திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளி : 360
திருவண்ணாமலை ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி : 288
திருவண்ணாமலை எஸ்கேவி இன்டர்நேஷனல் பள்ளி : 264
திருவண்ணாமலை விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளி : 480
ஆரணி அத்திமலைப்பட்டு துலிப் இன்டர்நேஷனல் பள்ளி : 528
ஆரணி கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி : 288
செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி : 1056
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தேர்வு 8 மையங்களில் இன்று நடக்கிறது; 3,768 மாணவர்கள் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.