ஊட்டி, மே 5: ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டு, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்கின்றனர். அங்கு சென்று படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்து ஏரியின் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வழியாக நடந்து செல்கின்றனர். அதேபோல், காந்தல், தீட்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்களும் இந்த நடைபாதையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இந்த நடைபாதை சில இடங்களில் பழுதடைந்து காணப்பட்டது. மேலும், சாலையோர தடுப்புகளும் சேதம் அடைந்திருந்தன.
இதனால், இந்த நடைபாதையில் நடந்துச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடந்துச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே, இந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது இந்த நடைபாதை சீரமைக்கப்பட்டு, தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம் appeared first on Dinakaran.