பெரம்பூர், மே 5: புளியந்தோப்பு நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் முகுந்தன் (51). இவர் இந்து முன்னணி அமைப்பில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். தொடர்ந்து இவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால் அந்த பதிவில் இருந்து நீக்கப்பட்டு தற்போது இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இவர் அவ்வப்போது குடித்துவிட்டு ஏரியாவில் பிரச்னை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போதையில் வாக்குச்சாவடிக்குள் சென்று பாஜவுக்கு அனைவரும் ஓட்டு போட வேண்டும் என கூறினார். இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை போதையில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார், விசு ஆகியோர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது முகுந்தனுக்கும் அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
போதையில் இருந்த முகுந்தன் தகாத வார்த்தைகளால் அப்பகுதி மக்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமார் 6 பேர் சேர்ந்து முகுந்தனை சரமாரியாக அடித்துள்ளனர். இதையடுத்து முகுந்தன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முகுந்தன் மீது 24 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை appeared first on Dinakaran.