×

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

 

ஆலந்தூர், மே 5: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உடைந்த பறக்கும் ரயில் மேம்பாலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விரைவான போக்குவரத்துக்காகவும் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் திட்டம் தீட்டப்பட்டு, இதற்கான பணி கடந்த 1997ல் தொடங்கி, 3 கட்டங்களாக நடந்து 2007ல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

அதனைத்தொடர்ந்து, 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி – பரங்கிமலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்தில் பறக்கும் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்கினால் பணிகள் தடைபட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், தில்லை கங்கா நகர் பகுதியில் இருந்து பரங்கிமலை வரையிலான 500 மீட்டர் தூரத்திற்திற்கான பணிகள் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது.

இந்த பணி முடிவடைந்து வரும் ஜூன் மாதத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தில்லை கங்கா நகர் மேம்பால பகுதியில், இரண்டு தூண்களுக்கு இடையே, 300 டன் எடை கொண்ட கர்டரை பொருத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி மாலை 6.15 மணியளவில் நடந்தது. அப்போது, பயங்கர சத்தத்துடன் கர்டர் சரிந்து கீழே விழுந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தெற்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, மேம்பால பணிகளை நிறுத்தி வைத்தனர். விசாரணைக்குபின், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சரிந்து கிடக்கும் கர்டரை உடைக்கும் பணி ராட்சத இயந்திரங்களை கொண்டு கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இப்பணி முடிவந்ததும், உடைந்த பகுதியில் மீண்டும் கர்டர் பொருத்தும் பணியும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி முடிந்ததும் பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thillai Ganga Nagar ,Adambakkam ,Alandur ,Chennai beach ,Velachery ,Adampakkam ,Thillai Ganga ,
× RELATED கட்டிட அனுமதி மீறியதாக கூறி அதிமுக...