புவனேஷ்வர்: பிரசாரத்துக்கு செலவு செய்ய போதிய பணமில்லாததால் ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பளார் மொகந்தி தேர்தலில் இருந்து விலகி உள்ளார். ஒடிசாவின் 147 பேரவை தொகுதிகளுக்கும், 21 மக்களவை தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பூரி மக்களவை தொகுதி மே 25ம் தேதி தேர்தலை சந்திக்கிறது.
பூரி தொகுதியில் மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் சார்பில் அருப் பட்நாயக்கும், பாஜ வேட்பாளராக பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரஜாமோகன் மொகந்தியின் மகள் சுசரிதா மொகந்தி நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் பிரசாரம் செய்ய போதிய பணமில்லை என்பதால் தேர்தலில் இருந்து விலகுவதாக சுசரிதா மொகந்தி காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “நான் 10 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் அரசியலில் நுழைந்தபோது மாதசம்பளம் வாங்கும் ஒரு தொழில்முறை பத்திரிகையாளராக இருந்தேன். தற்போது பூரியில் போதிய பணமின்றி பிரசாரத்தை தொடர முடியவில்லை. எனவே என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது ” என்று தெரிவித்துள்ளார்.
பாஜவால் கட்சி நிதி முடக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுசரிதா மொகந்தி, “காங்கிரசின் நிதி ஆதாரங்களை பாஜ முடக்கி விட்டதால் கட்சியால் என் பிரசாரத்துக்கு நிதி தர முடியவில்லை. மக்கள் சார்ந்த பிரசாரத்தை நான் விரும்புகிறேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் சாத்தியமில்லை. தேர்தலில் போட்டியிடா விட்டாலும் நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசியாக இருப்பேன். எனக்கு ராகுல் காந்திதான் தலைவர்” என்று கூறினார்.
The post செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல் appeared first on Dinakaran.