×

காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலையில் 3 இந்தியர்கள் கைது: கனடா போலீஸ் தகவல்

ஒட்டவா: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தானுக்கு ஆதரவான பல வழக்குகளில் சம்மந்தப்பட்டு இந்திய அரசால் தேடப்படும் நபரான சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவின் சர்ரே நகரில் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்திய அரசு மறுத்தது. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கனடா போலீசார் நேற்று அறிவித்துள்ளனர். அவர்கள், எட்மாண்டனில் வசிக்கும் கரண் பிரார் (22), கமல்பிரீத் சிங் (22), கரண்பிரீத் சிங் (28) என போலீசார் கூறி உள்ளனர். இவர்கள் கனடாவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் அல்ல என்றும் கடந்த 3 முதல் 5 ஆண்டாக கனடாவில் தங்கியிருப்பவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் இந்திய உளவுத்துறை உத்தரவின் பேரில் இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா தேர்தலில் இந்தியா தலையீடு
இதற்கிடையே, காலிஸ்தான் விவகாரத்தால் கனடா தேர்தலில் இந்தியா தலையிடுவதாக கனடா அரசின் பொது விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இக்குழு 2019, 2021ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. இது அடிப்படை ஆதாரமற்றது என இந்திய வெளியுறவுத்துறை மறுத்திருந்தது. இந்நிலையில், காலிஸ்தான் விவகாரத்தில் தனது சாதகமான அரசை அமைக்க இந்தியா, கனடா அரசியலில் தலையிடுவதாக இடைக்கால அறிக்கையில் கூறி உள்ளது. இதே போல, அந்நிய சக்திகளின் தலையீட்டின் முக்கிய ஆதாரமாக சீனா இருப்பதாகவும் இடைக்கால அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் கொலையில் 3 இந்தியர்கள் கைது: கனடா போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nijjar ,Ottawa ,Indians ,Hardeep Singh Nijjar ,Khalistan ,Indian government ,Dinakaran ,
× RELATED காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கு: 3 இந்தியர்களிடம் நீதிமன்றம் விசாரணை