×
Saravana Stores

ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைச்சர் ரோஜாவுக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாமல் உள்ளனர். இதனால் பல இடங்களில் அமைச்சர் ரோஜா, தனி ஆளாக சென்று வாக்குசேகரித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் ேராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக கூறி திருப்பதி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது வடமாலை பேட்டை ஜில்லா பரிஷத் உறுப்பினர் முரளிதர் உள்ளிட்டோர் கூறியதாவது: 6 கிராம பஞ்சாயத்து தலைவர்கள். 2 மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட 11 உள்ளாட்சி பிரநிதிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்கிறோம். அதோடு நகரி தொகுதியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஜெகன் கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வந்தோம். 2014-2019ம் ஆண்டு தேர்தலில் ரோஜாவை வெற்றி பெறுவதற்காக நாங்கள் அனைவரும் பாடுபட்டோம். ஆனால் ரோஜா, கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்தவித பதவிகளும் கிடைக்கவிடாமல், அவருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கினார்.

அதுமட்டுமின்றி கட்சியில் கணவர் ஆர்.கே.செல்வமணி, ரோஜாவின் சகோதரர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. அவர்கள் கைகாட்டியவர்களுக்கு பதவிகளை ரோஜா வாங்கித்தந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ஒவ்வொரு பிரசாரத்திலும் சந்திரபாபுவுக்கு ஓட்டுப்போட்டால் ஆந்திர மக்களின் ரத்தத்தை குடிக்க சந்திரமுகி ஆட்சி வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் உண்மையில் ரோஜாவுக்கு வாக்களித்தால்தான் சந்திரமுகி வந்துவிடும். எனவே நகரி தொகுதி மக்கள் ரோஜாவை தோற்கடிக்கவேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் கூட எந்த ஒரு பணிக்கும் அமைச்சர் ரோஜா, கை நீட்டுகிறார். கமிஷன் இல்லாமல் எந்த பணியும் செய்வதில்லை. முதல்வர் நிவாரண நிதியில் கூட 10 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளார். விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் பெற்றுள்ளார். வடமாலைபேட்டை சுங்கசாவடி அருகே பல கோடி மதிப்புள்ள 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். நகரியில் ரோஜா செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெகனிடம் சில மாதங்களுக்கு முன்பே ஆவணங்களுடன் சென்று தெரிவித்தோம். இருப்பினும் ரோஜாவுக்கு மீண்டும் அவர் வாய்ப்பு வழங்கியுள்ளார். ரோஜா கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரை
மதிக்காமல் செயல்படுகிறார். எனவே நகரி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்துவிட்டோம். விரைவில் அனைவரும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் காலி பானு பிரகாஷ் முன்னிலையில் அவரது கட்சியில் இணைய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆந்திர மாநிலத்தில் வருகிற 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் அமைச்சர் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த கட்சியில் அதிருப்தியாளர்கள் ராஜினாமா செய்து வருவதால் அவரது வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

The post ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Roja ,Tirumala ,YSR ,Chittoor District Nagari Legislative ,Assembly ,Minister ,Congress ,Dinakaran ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்