×
Saravana Stores

தெளிவு பெறுவோம்

சுபகாரியங்களுக்குப் போகும் பொழுது பூனை குறுக்கே வந்தால் என்ன செய்ய வேண்டும்?

– ஸ்ரீதேவி பாலசுப்ரமணியன், அரக்கோணம்.

பதில்: சகுனத் தடைகள் என்று சில விஷயங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதிலே ஒரு விஷயம்தான் பூனை குறுக்கே செல்வது. ஏதாவது முக்கியமான காரியங்களுக்கு வெளியே செல்லும் பொழுது, பூனை குறுக்கே வந்தால் அச்சப்பட வேண்டியதில்லை. திரும்பவும் வீட்டுக்குள்ளே வந்து தண்ணீர் அருந்தி விட்டு சிறிது நேரம் கழித்து செல்லலாம். வெளியிலே செல்லும் பொழுது கால் வழுக்கினாலோ அல்லது தலை இடித்துக் கொண்டாலோ அப்பொழுதும் இதைப் போலவே சற்று நிதானித்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியே செல்ல வேண்டும்.

? பிடாரி அம்மன் என்று சொல்கிறார்களே பிடாரி என்றால் என்ன பொருள்?
– சின்னதுரை, மேல்மருவத்தூர்.

பதில்: இரண்டு விதமாக இதற்குப் பொருள் சொல்கிறார்கள். திரிபுரம் எனப்படும் முப்புரத்தை காவல் காத்தமையால் முப்புராரீ என்பது மருவி முப்புடாதி, முப்பிடாதி, முப்பிடாரி என்று வந்தது. பிடரி என்றால் கழுத்து. மூன்று முகங்களுடன் மூன்று பிடரிகள் கொண்ட அம்மன் முப்பிடாரி என்றும் சொல்கிறார்கள். அதுவே மருவி, முப்புடாதி என ஆகியது. இந்த அம்மன் பலருக்கு குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகின்றாள். திருநெல்வேலி மாவட்டங்களில் முப்புடாதி அம்மன் மிகவும் பிரசித்தம்.

? ஆன்மிகத்திலும் வாழ்வியலில் வெற்றி பெறுவதற்கு என்ன வழி?
– எஸ்.சிவராஜன், ஆத்தூர்.

பதில்: பொறுமையும் முயற்சியும்தான் வழி. இங்கு பலருக்கும் பொறுமை இல்லை. எல்லாவற்றிலும் அவசரம். ஒரு உதாரணம் சொல்கிறேன். மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். ஆனால், அதற்கு அடுத்த பருவத்தில் சட சடவென மூங்கில் வளரத் துவங்கும். ஒரே ஆண்டில் 80 அடிகள் உயரம். அது எட்டிப் பிடிக்கும். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. வேர் பலமாக இருப்பதால், ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை! பொறுமையும் விடா முயற்சியும் வெற்றிகளை உருவாக்குகிறது. நமது அடித் தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

? கேது பகவானுக்கு எங்கு சாந்தி செய்ய வேண்டும்?
– அர்ஜூனன், கோவில்பட்டி.

பதில்: கேது பல காரக பலன்களை கொண்டவர். புத்திசாலித்தனம், ஞானம், பற்றற்ற தன்மை, கற்பனை, ஊடுருவும் நுண்ணறிவு, சிதைவு மற்றும் மனநலத் திறன்களின் குறிகாட்டியாக விளங்குகிறார். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேது ஆதிக்கத்தில் இருப்பவர்கள். கேது செவ்வாய் இணைவு, சனி இணைவு போன்ற அமைப்புக்கள் அறுவை சிகிச்சை போன்ற தீவிரத்தன்மையைத் தரும். கேது சந்திரன் சேர்க்கை மனக்குழப்பத்தையும், முடிவுகள் செய்வதில் தடுமாற்றங்களையும் தரும்.

கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வதும், காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோயில் சென்று வழிபாடு செய்வதும் உத்தமம். வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் தரும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும், சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும்.

? ஒருவரது அந்திம காலத்தை யாரால்
துல்லியமாகச் சொல்லமுடியும்?
– வேதப்ரியா, காட்டுமன்னார்கோவில்.

பதில்: ஒருவரது இறுதி நாட்களை ஜோதிடக் கணிதம் மூலம் சொல்ல முடியும் என்று சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மகான்கள், தங்கள் இறுதிக்காலம் குறித்து மிகத்துல்லியமாக தங்கள் சீடர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். அவர்களுடைய அந்தராத்மாவுக்கு எதிர்கால நிகழ்வுகள் படம் போல் தெரிகின்றன. இது புராணத்தில் மட்டுமல்ல அண்மையில் நம்மிடையே வாழ்ந்த பல மகான்களின் வாழ்க்கையிலும் நாம் காண முடியும். வள்ளலார், ராகவேந்திர சுவாமிகள், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற மகான்கள் தங்கள் இறுதி நாட்களைக் குறித்து மிகத் தெளிவாக இருந்தார்கள். அதுவும் சுவாமி விவேகானந்தரின் இறுதி நாள் எப்படி கழிந்தது என்பதை அறிய வியப்பு ஏற்படுகிறது. இது குறித்துப் பதிவுகள் இருக்கின்றன.

தாம் உடலைவிட இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக்கரையோரம் உலாவிக்கொண்டிருந்தபோது வில்வ மரத்தடியில் நின்றார். அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். தம் சீடர்களுடன் சற்று நேரம் அந்த வில்வ மரத்தையே உற்றுப் பார்த்த சுவாமிகள், “தாம் தேகத்தை விட்ட பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்து விடும்படி” சுவாமிகள் உத்தரவிட்டார். உடலைத் துறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு, சுவாமிகள் தாமே அமுது சமைத்து சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார். 1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் பஞ்சாங்கத்தில் விடுதலைக் குரிய நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று சிவராத்திரி.

ஜூலை 4-ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு தியானம் செய்தார். வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார். நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார். மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக் கொண்டு சுவாமி விவேகானந்தர் இரண்டு மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார்.

மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து ஆனந்தமாக உரையாடினார். குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது. எல்லாரையும் அதில் கலந்து கொள்ளும்படி பணித்தார். சுவாமிகள் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார். ஆசனம் விரித்து கிழக்குமுகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில் அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார்.

பிறகு “தியானம் செய்து கொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப் பகர்ந்தார். இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது. இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார்.ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர். அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ‘‘I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகிர்ந்திருந்தார்.

? வீட்டில் சரம ஸ்லோகம் படிக்கலாமா?
– அருண் பிரகாஷ், ஈரோடு.

பதில்: நீங்கள் எந்த சரம ஸ்லோகத்தைக் குறித்து கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொதுவாகவே லௌகீகமான சரம ஸ்லோகங்கள் உண்டு. ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய கரும காரிய பத்திரிக்கையில் அச்சிடுவதற்காக எழுதுவார்கள். இது சாதாரணமான சரம சுலோகம். ஆனால் வைணவத்தில் சரம ஸ்லோகம் என்று மூன்று விஷயங்கள் உண்டு. ஒன்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம்.

இன்னொன்று ராமன் விபீஷ்ணனிடத்திலே சொன்ன சரம ஸ்லோகம். மூன்றாவது வராகப் பெருமாள் சொன்ன சரம ஸ்லோகம். இந்தச் சரம ஸ்லோகங்களை தினசரி பூஜை அறையில் சொல்ல வேண்டும். வைணவர்கள் திருமண் இட்டுக் கொள்ளும் போதும் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுதும் இந்த மூன்று சரம ஸ்லோகத்தையும் சொல்லாமல் பூஜையை முடிக்க மாட்டார்கள். சரம ஸ்லோகம் என்பது ‘‘இதைவிட மேலான ஒரு ஸ்லோகம் இல்லை’’ என்பது. எல்லாச் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் விட இந்த சரம ஸ்லோகம் உயர்ந்தது என்பதால் தினசரி அவசியம் சொல்ல வேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.

Tags : Sridevi Balasubramanian ,Arakonam ,Dinakaran ,
× RELATED புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி...