உலகப் பொதுமறையான திருக்குறள் உலகம் என்ற சொல்லைப் பல இடங்களில் ஆள்கிறது. திருக்குறளின் முதல் குறளிலேயே உலகு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(குறள் எண் 1)
என்கிறார் வள்ளுவர். எழுத்து வரிசை அகரத்தைத் தொடக்கமாகக் கொண்டதுபோல் உலகம் கடவுளைத் தொடக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார் அவர்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்
யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு.
(குறள் எண் 20)
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. அதுமட்டுமல்ல, மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்றிவ்
வைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
(குறள் எண் 27)
சுவை பார்வை தொடுதல் ஓசை மணம் என இவ்வைந்தையும் ஆராய்ந்து அறிபவனுடைய அறிவில் வசப்படுவதே இவ்வுலகம்.
நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
(குறள் எண் 222)
நல்லது என்றே சொல்லப்பட்டாலும் பிறரிடம் பொருளைப் பெறுவது சிறுமையானதுதான். மேலுலகம் கிட்டாவிட்டாலும் கூடப் பொருளை
வழங்குவதே நல்லது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
(குறள் எண் 335)
நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இந்த உலகம்.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
(குறள் எண் 1031)
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த்தொழிலின் பின்னேதான் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. இப்படி, உலகு என்ற சொல்லைக் கொண்டு தொடங்கும் குறள்கள், உலகு என்ற சொல்லைக் கொண்டு முடியும் குறள்கள், இடையே உலகு என்ற சொல் பயின்றுவரும் குறள்கள் எனத் திருக்குறளில் இன்னும் பற்பல இடங்களில் உலகைக் காண முடிகிறது. உலகை நாம் எவ்விதம் காணவேண்டும் என்று இந்தக் குறட்பாக்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
நிலம் நீர் தீவளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
– என்கிறது தொல்காப்பியர் எழுதிய பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்.
ஐம்பூதங்களால் ஆனதே உலகம் என அது உலகை வரையறுக்கிறது. தசாவதாரங் களில் ஒன்றான வராக அவதாரத்தின் கதை பூமியைப் பற்றியதுதான். இரணியனின் தம்பியான இரணியாட்சன் என்ற அரக்கன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்ததாகவும் திருமால் வராகமாக, அதாவது ஆண் பன்றியாக அவதரித்து அவனோடு சண்டையிட்டு அவனை வதம் செய்து பூமியை மீட்டதாகவும் சொல்கிறது வராக அவதாரப் புராணக் கதை.
ஞானப் பழம் பெற்ற விநாயகர் கதை நாம் அனைவரும் அறிந்த கதை. உலகத்தை முதலில் சுற்றி வருபவர்க்கு நாரதர் தன்னிடம் கொடுத்த பழம் தரப்படும் எனப் பிள்ளையார், முருகன் என்ற தன் இரு பிள்ளைகளிடையே போட்டியை அறிவிக்கிறார் சிவபெருமான். முருகப் பெருமான் நம்பிக்கையோடு மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவரப் புறப்படுகிறார். பிள்ளையாரின்
வாகனம் எலி. ஊர்ந்துசெல்லும் வாகனத்தில் ஏறி என்றைக்கு உலகைச் சுற்றி முடிப்பது? எப்போது திரும்பி வருவது? சிந்தனையில் ஆழ்கிறார் விநாயகர்‘உலகம் என்றால் என்ன, அம்மையப்பன் என்றால் என்ன, அம்மையப்பன் தானே உலகம்?’ எனச் சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் விளக்கம் கேட்டுக்கொண்ட விநாயகப் பெருமான், உடனடியாகப் பெற்றோரை வலம்வந்து போட்டியில் தானே வென்றதாகக் கூறி, பழத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
உண்மையிலேயே மயில்வாகனத்தில் ஏறி உலகம் முழுவதையும் சுற்றிவந்த முருகன் தன் தந்தை சிவபெருமான் வசிக்கும் கயிலாயத்திற்குத் திரும்புகிறார். நடந்தவற்றை அறிந்து, கடும் சினம்கொள்கிறார். மூத்த பிள்ளைதான் செல்லப்பிள்ளை, இளைய பிள்ளை எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளை எனக் கூறிக் கயிலாயத்தை விட்டு விலகிச் செல்கிறார். முருகன் ஆண்டியாகப் பழனிமலை சென்றதாகவும் பின்னர் பெற்றோரால் சமாதானமடைந்ததாகவும் சொல்கிறது கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணக் கதை. தாய்தந்தையரின் பெருமையை உணர்த்த எழுந்த கதை இது.
`உ’ என்ற எழுத்தை மங்கல எழுத்து எனக் கருதும் மரபு தமிழில் இருக்கிறது. `உ’ என்ற எழுத்தையே பிள்ளையார் சுழி எனக்கொண்டு, எதைத் தொடங்கும்போதும் விக்கினங்கள் தீரும் பொருட்டு அதை முதலில் எழுதுகிறோம். உலகம் என்பது மங்கலச் சொல். தமிழின் முக்கியமான பல காப்பியங்கள் உலகம் என்ற சொல்லை முதலாகக்கொண்டே எழுதப்பட்டுள்ளன.
‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
– என்பது கம்ப ராமாயணத்தின் முதல் பாடல்.
‘உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’
– என்பது சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்.
சேக்கிழார் பெரியபுராணம் எழுத முற்பட்டபோது, உலகெலாம் எனச் சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது பெரியபுராணம் தோன்றிய கதை.
‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு’
– எனத் தொடங்குகிறது நக்கீரர் எழுதிய சங்கப் பனுவலான திருமுருகாற்றுப்படை.
பின்னாளில் பிரபல நாவலாசிரியையான வை.மு.கோதைநாயகியும் இத்தகைய தமிழின் செய்யுள் மரபைத் தம் உரைநடையில் பின்பற்றினார். அவர் எழுதிய நூற்றுப் பதினாறு புதினங்களும் `உ’ என்ற எழுத்தில்தான் தொடங்குகின்றன என்பதொரு விந்தையான தகவல். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் பதினான்கு உலகங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்கிறது இந்து மதம். பூமிக்கு மேலே ஆறு உலகங்களும் பூமிக்குக் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன.
சத்யலோகம், தபோலோகம், ஜனோ லோகம், மஹர் லோகம், சுவர் லோகம், புவர் லோகம் ஆகியவை பூமிக்கு மேலே உள்ள ஆறு உலகங்கள். அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம், மகாதல லோகம், ரஸாதல லோகம், பாதாள லோகம் என்னும் ஏழும் பூமிக்குக் கீழே உள்ள உலகங்கள். நம் இலக்கியங்கள் பலவும் ஈரேழு உலகங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
‘ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும்
படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்
பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும்
நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு
நகையுடைத்தே’
– என்கிறது அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதிப் பாடல்.
இதில் ஈரேழ் உலகம் குறிப்பிடப்படுகிறது. (பாடல் எண் 26) ‘என்ன தவம் செய்தனை யசோதா’ எனத் தொடங்கும் புகழ்பெற்ற கீர்த்தனையில் அதை இயற்றிய பாபநாசம் சிவன், பதினான்கு உலகங்களையும் படைத்தவனாகக் கண்ணனைக் காண்கிறார்.
‘ஈரேழு புவனங்கள் படைத்தவனைக்
கையில் ஏந்திச் சீராட்டிப் பாலூட்டித்
தாலாட்ட நீ ன்ன தவம் செய்தனை?’
என யசோதையைப் பார்த்துக் கேட்கிறார் அவர். ஈரேழு பதினான்கு உலகம் எனச் சொல்லப்பட்டாலும் அவற்றை மண்ணுலகம், மண்ணுக்குக் கீழுள்ள உலகம், விண்ணுலகம் என மூன்றாகத் தொகுத்துச் சொல்லும் மரபும் உண்டு. அப்போது அந்தத் தொகுப்பு திரிலோகம் என வழங்கப்படுகிறது. இந்த மூன்று வகைப்பட்ட உலகங்களிலும் சஞ்சரிப்பவர் நாரத முனிவர். எனவே அவர் திரிலோக சஞ்சாரி என அழைக்கப்படுகிறார்.
‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை
முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடு கான்
போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை
கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன
செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன
செவியே’
என்ற இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரப் பாடல் உலகங்களை மூவுலகு எனத் தொகுத்துச் சொல்கிறது. உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி என்று உலகம் என்ற சொல்லில் தொடங்குகிறது மகாகவி பாரதியார் இயற்றிய பக்திப் பாடல்.
உலகத்து நாயகியே! எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர்,
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
கருத்தி னுள்ளே புகுந்துவிட்டார்,
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்துமாரி!
பலகற்றும் பலகேட்டும்
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை,
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,
எங்கள் முத்து மாரியம்மா,
எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரணடைந்தோம் எங்கள் முத்துமாரி என்று முத்துமாரி அம்மனைப் போற்றும்போது அவளை உலக நாயகி எனக் கொண்டாடுகிறார் மகாகவி பாரதியார். உலகநாதன், உலக நாயகி, உலகம்மை என்றெல்லாம் உலகத்தை முன்னிட்டுப் பெயர் வைக்கும் வழக்கமும் தமிழகத்தில் உண்டு. இவையெல்லாம் கடவுளரின் நாமங்களும் கூட.`உலகம் சுற்றும் வாலிபன், உலகம் இவ்வளவுதான், உலகம் சிரிக்கிறது, உலகம் பலவிதம், உலகம் பிறந்தது எனக்காக’ போன்ற பற்பல தலைப்புகளில் உலகம் என்ற சொல்லைத் தாங்கிப் பல தமிழ்த் திரைப்படங்கள் வந்துள்ளன. ஏன், ‘உலகம்’ என்ற தலைப்பிலேயே கூட ஒரு திரைப் படம் வெளிவந்துள்ளது. `உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என்பது அருணோதயம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டிஎம்எஸ் குரலில் ஒலிக்கும் பாடல்.
`உலகம் பிறந்தது எனக்காக அதில்
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!’
என்பது பாசம் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி,
டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் இன்னொரு பாடல்.
‘அடி என்னடி உலகம் இதில்
எத்தனை கலகம்…
பந்தம் என்பது சிலந்திவலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது சந்தையடி அதில்
சுற்றம் என்பது மந்தையடி!’
என்ற பாடல் வரிகள் எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் “அவள் ஒரு தொடர்கதை’’ திரைப்
படத்தில் ஒலிக்கும் கண்ணதாசனின் வரிகள்.
‘உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீசெய்யும் அதிகாரமே!’
என்ற முருகனைப் பற்றிய பக்திப் பாடல் கண்ணதாசனால் எழுதப்பட்டு திருவருள் திரைப்படத்தில் ஒலிக்கிறது. உலகம் போற்றும் கவிஞரான கண்ணதாசன், உலகம் என்ற சொல்லைத் தம் கவிதைகளில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். இவ்விதம் உலகம் என்ற சொல்லைப் பற்பல விதங்களில் எடுத்தாள்கிறது தமிழ்த் திரை உலகம். திருவள்ளுவர் உலகில் பிறந்தார்.
முதிர்ந்த ஞானியான அவர், உலக வாழ்வை உற்று நோக்கினார். உலகம் பயனடையும் வகையில் அறக்கருத்துகளைக் கூறி திருக்குறள் என்ற அற்புதமான நூலை எழுதினார். உலகை விட்டு அவர் மறைந்தார். ஆனால் உலகம் உள்ளளவும் அவர் எழுதிய திருக்குறளும் அதில் சொல்லப்படும் அற நெறிகளும் மறையாமல் உலகைக் காத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
(குறள் உரைக்கும்)
திருப்பூர் ருஷ்ணன்
The post திருக்குறளில் உலகம்! appeared first on Dinakaran.