×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 4.5.2024 – சனி

இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம். சூரியன் மேஷ இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம். அர்ச்சுனன் காண்டவவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம். அக்னி நட்சத்திரத்தின் போது, திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலீஸ்வரருக்கு தாராபிஷேகம் செய்வார்கள்.

அக்னியில் செய்யக்கூடாத செயல்கள்: குறிப்பாகக் கிணறு வெட்டுதல், பூமி பூஜை செய்வது, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, விதை விதைப்பது, மரம் வெட்டுவது, குழந்தைகளுக்குக் காதுகுத்தி மொட்டை போடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது. ஏற்கனவே, கட்டி முடித்துத் தயாராக உள்ள வீட்டில் குடியேற லாம். வாடகை வீட்டை மாற்றலாம். உபநயனம், பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், சீமந்தம் ஆகிய சுப காரியங்களையும் செய்யலாம். முக்கியமாக தானம் செய்ய வேண்டும். உணவு, நீர், உடை ஆகியனவற்றை தானம் செய்ய வேண்டும்.

ஏகாதசி 4.5.2024 – சனி

சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு “பாப விமோசன ஏகாதசி” என்று பெயர். நாம் தெரியாமல் செய்து விடும் சில பாவங்களால் ஏற்படும் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் பிராயச்சித்தமாக பாபவிமோசன ஏகாதசி விளங்குகின்றது. ஏகாதசி அன்று காலையில் விரதமிருந்து, பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசியால் அர்ச்சனை செய்து, மறுநாள் காலை, சூரிய உதயத்திற்கு முன்னால், துவாதசி பாரணை செய்து, விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும், சுபிட்சமான நல்வாழ்க்கை கிடைக்கும்.

மச்ச ஜெயந்தி 6.5.2024 – திங்கள்

சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் ஸ்ரீமன் நாராயணன் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார். மச்ச மூர்த்தி ஆலயங்கள் குறைவு. ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேதநாராயண சுவாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். அற்புதமாக மச்சாவதாரக் கோலத்திலே அருள்புரியும் திருத்தலம். மூலவராக மச்சாவதார மூர்த்தி வேத நாராயணப் பெருமாளாக, ஸ்ரீதேவி பூதேவியுடன் தனிச் சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே.

மூலவர் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. மச்ச ஜெயந்தி காலத்தில் வேதம் படித்தவர்கள், கல்வி கற்கின்ற மாணவர்கள், கல்வியைச் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், கலைகளைச் சொல்லித் தருகின்ற ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எல்லோரும் அவசியம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி, அர்ச்சனை செய்வதன் மூலமாக, தங்கள் தொழிலில் மிகப்பெரிய ஏற்றத்தை பெறலாம். கல்வியில் முன்னேறலாம்.

ஸ்ரீரங்கம் தேரோட்டம் 6.5.2024 திங்கள்

ஸ்ரீரங்கத்தில் விழாக்கள் நடைபெறாத நாட்கள் குறைவு. பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதில் சித்திரைமாதம் ரங்கம் திருத்தேர் விழா மிக முக்கியமான விழா. அதுவும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இந்த தேர் நிகழ்வு நடைபெறும். சித்திரை ரேவதி நட்சத்திரம் என்பது திருவரங்கம் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளின் திருநட்சத்திரம். சித்திரை மாதத்தில் “விருப்பன் திருநாள்” எனப்படும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதில் 9ஆம் நாள் திருவிழா அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வருகின்ற கிளி மற்றும் சாற்று மாலையை அணிந்தபடி நம்பெருமாள் சித்திரை தேரில் வீதி வலம் வருவார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘திருவரங்கா, ரங்கா’’ என்ற கோஷத்துடன் வடம் தொட்டு தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தை ஒட்டி வழிநெடுக அன்னதானம் நீர், மோர், பானங்களை பொதுமக்கள் வழங்குவார்கள். ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான விழா இந்த திருத்தேர் விழா.

அமாவாசை 7.5.2024 செவ்வாய்

எல்லாக் கடன்கள் தீர்ந்தாலும் நீத்தார் கடன் தீராது. ஆகையினால் இன்றைய தினத்திலே நீங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக எள்ளும் நீரும் அளிக்க வேண்டும். அதற்கு பிறகு அன்னதானம் போன்றவற்றைச் செய்யலாம் மதியம். தலைவாழை இலை வைத்து நம்முடைய முன்னோர்களுக்குப் படையல் போட வேண்டும். உச்சி காலத்தில் அவர்களுக்கு பூஜை செய்து பிறகு காக்கைக்கு ஒரு பிடி அன்னம் வைத்து விட்டு அதற்குப் பிறகு உன்ன வேண்டும்.

வடுக நம்பி 7.5.2024 செவ்வாய்

வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், ஆசாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம். ஆசாரிய அபிமானம் மட்டுமே ஜீவனுக்கு நிறைவு நிலை என்பது வைணவத்தின் அசைக்க முடியாத கோட்பாடு. இந்த ஆச்சாரிய அபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இராமானுஜரின் சீடரான வடுக நம்பிகள். வடுக நம்பிகள் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில், கர்நாடகாவில் உள்ள சாளக்கிராமம் என்னும் ஊரில் அவதரித்தவர். பெருமாளுக்கு ஆராதனம் செய்வதை விட, தினமும் இராமானுஜரின் பாதுகைகளுக்கு திருவாராதனம் செய்வர்.

இராமானுஜர் மிகக்கடுமையாக ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. பல பணிகளுக்கு நடுவிலே அவர் சரியாக உணவு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அவர் உடல்நிலை தளர்ந்தது. அதனால் தினமும் அவருக்கு மஞ்சள் போன்ற மருத்துவ பொருள்களைப் போட்டு, தொண்டைக்கும் உடலுக்கும் இதமான பால் காய்ச்சி தரும் பணியைச் செய்து வந்தார் வடுக நம்பி. ஒரு நாள் வடுக நம்பி, திருமடைப்பள்ளியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது திருவரங்க உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருவீதி வலம் வந்து கொண்டிருந்தார்.

இராமானுஜரின் மடத்து வாசலில் பெருமாள் வீதிவலம் சற்று நேரம் நின்றது. இராமானுஜர் பெருமாளை சீடர்களுடன் சேவித்தார். அப்பொழுது வடுக நம்பி இல்லாததைக் கண்டு, ‘‘வடுக நம்பி, இங்கே வா. பெருமாளை சேவிக்க வேண்டும்’’ என்று அழைக்க, உள்ளேயிருந்து வடுக நம்பி வெளியே வராமல், குரல் கொடுத்தாராம்.

“அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” அதனால்தான் வைணவத்தில் எல்லையற்ற ஆசாரிய அபிமானம் கொண்டவர்களை வடுக நம்பியோடு ஒப்பிட்டு பேசுவார்கள்.

மதுர காளியம்மன் பூச்சொரிதல் விழா 7.5.2024 செவ்வாய்

பெரம்பலூர் அருகே உள்ளது சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில். இங்கே சித்திரை தேரோட்ட விழா மிகவும் விசேஷமாக நடைபெறும். இந்த தேரோட்டத்தை ஒட்டி பூச்சொரிதல் விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும். சிறுவாச்சூருக்கு பக்கத்தில் உள்ள பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும் மதுர காளியம்மனுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்து, நாள்தோறும் யானை, குதிரை, உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலாக் காட்சிகள் நடக்கும். அவ் விழாவின் தொடர்ச்சியாக இன்று பூச்சொரிதல் விழா.

சிறுதொண்டர் குருபூஜை 8.5.2024 புதன்

திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் அவதரித்தவர் பரஞ்சோதியார். அவர் பல்லவ மன்னனிடம் சேனாதிபதியாகப் பணியாற்றினார். மிகப்பெரிய வீரரான அவருடைய நாவில் எப்பொழுதும் சிவ நாமமே ஒலித்துக் கொண்டிருக்கும். சிவனடியார்களைக் கண்டு, அவர்களுக்கு அனைத்து தொண்டினையும் செய்வதில் மகிழ்ச்சி அடைவார். ஒருமுறை அவர் வடநாடு சென்றார். வாதாபிப் போரில் வென்றார். அவர் அடைந்த வெற்றிக்கு பலவித விருதுகளும் பரிசுகளும் வழங்கினான் மன்னன். வாதாபி வெற்றிக்குப் பிறகு போர்த்தொழிலில் இருந்து விலகி தம் முடைய ஊருக்கு வந்து சிவத் தொண்டு புரிந்தார். திருச்செங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை தவறாது செய்தார்.

பிறகு திருவெண்காடு நங்கை எனும் மங்கை நல்லாளை திருமணம் செய்து கொண்டு மனையறத்தினை இனிதே நிகழ்த்தினார். நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப், பின், தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவனடியார்களை விரும்பித் தொழுது, அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் ‘சிறுத்தொண்டர்’ என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் மைந்தர் பிறந்தார்.

சிவபெருமான் இவர் சிவ பக்தியை உலகுக்கு உணர்த்த, பைரவராக வேடம் பூண்டு, இவர் திருமாளிகைக்கு வந்து பிள்ளைக்கறி அமுது கேட்க அதையும் அளித்தார். குடிக்கொரு புதல்வனை, மகிழ்ச்சியான மனத்துடன், பிறர் நினைக்கவும் முடியாத, கறியமுது செய்யும் செயலைச் செய்தார். ஈசன் அடியார்களுக்கு எச்செயலும் அரிதல்லவே. சோதனைகள் அவர்களுக்கு சாதனைகளே ஆகும். சிறுத்தொண்ட நாயனார் குருபூசை இன்று. சித்திரை பரணி.

காரைக்குடி கொப்புடை அம்மன் காம தேவ வாகனம் 8.5.2024 புதன்

காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்சை காட்டுப் பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது. காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் காட்டம் மனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தன் மூத்த தமக்கையின் பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாரென்றும் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாரென்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளை களை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்றும் இக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரைபெருவிழாவில் இன்று அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

அட்சய திருதியை 10.5.2024 வெள்ளி

இந்த முறை அட்சய திருதியை சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை அமைந்திருக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் உச்சமடையும் நாளில் அமைந்திருக்கிறது. அட்சய திருதியை நாளில் எதைச் செய்தாலும் நிறைவு தருகின்ற வகையில் ஒன்று நூறு ஆயிரமாகப் பல்கிப் பெருகும்.

அட்சய திருதியை அன்று தான தர்மத்தை அதிகம் செய்ய வேண்டும். அமாவாசைக்கு 3-வது நாள் திருதியை. 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குருவுக்கு உரிய உலோகத்தில் ஒன்று மஞ்சள் நிறமுடைய தங்கம். இதனால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவதும் தானம் செய்வதும் சிறப்பு பெறுகிறது.

மங்கையர்க்கரசி குரு பூஜை 10.5.2024 வெள்ளி

மங்கையர்க்கரசியார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பாண்டிய நாட்டு அரசி. பாண்டி நாட்டு அரசன் சமணத்தைப் பின்பற்றி இருந்தான். பாண்டி நாட்டில், மீனாட்சி அம்மன் திருக்கோயில் இருக்கக்கூடிய கூடல் நகரில், சைவ நெறி தழைக்க வேண்டும் என்று மங்கையர்க்கரசி விரும்பினார். குலச்சிறையார் என்கின்ற சைவப்பெரியாரை துணை கொண்டு திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். இறை அருளால் பாண்டிய மன்னனுக்கு கொடுமையான சூலை நோய் வந்தது. அந்த நோயை சமணர்களால் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனின் நோயைத் தீர்த்தார். அதனால் மகிழ்ந்த மன்னன், சம்பந்தரின் அறிவுரை கேட்டு, சைவத்துக்கு மாறினான். இப்போது உள்ள சம்பந்தர் திருமடம் அப்போது ஏற்பட்டது தான். இதற்குக் காரணம் மங்கையர்க்கரசி. அவருடைய குரு பூஜை தினம் இன்று.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Saturn ,Sun ,Aries ,Archuna ,Indra ,Gandavavana ,Agni Nakshatra ,Tiruvannamalai ,
× RELATED தன வசிய யோகம்