ராய்ச்சூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி ஒருவர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தை காட்டி பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மக்களவை வேட்பாளரும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களுக்கு தெரியும். இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ளூர் பாஜ தலைவர் தேவராஜ் கவுடா ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
(அந்த கடிதத்தின் நகலை கையில் எடுத்து ராகுல் காண்பித்தார்) அதில், ஒரு பென்டிரைவ் முழுவதும் பிரஜ்வலின் பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவ்விஷயத்தில் அமித் ஷா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் நாட்டின் பிரதமர், பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவருக்கு ஆதரவாக மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இந்த நபரை (பிரஜ்வல் ரேவண்ணா) பிரதமர் எதற்காக பாதுகாத்து வருகிறார். எதற்காக அவர் மக்களிடம் வாக்கு கேட்கிறார். இவ்விஷயத்தில் நாட்டு பெண்கள் அனைவரையும் பிரதமர் அவமதித்துள்ளார். அதனால் பெண்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். இதையெல்லாம் அறிந்த பிறகும் மோடியும், அமித் ஷாவும் அவரை (பிரஜ்வல் ரேவண்ணா) நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? எதற்காக அப்படி செய்தார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். பாஜ நிர்வாகி தேவராஜ் கவுடா அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தை ராகுல் வெளியிட்டது கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம் appeared first on Dinakaran.