×

பாஜ ஆட்சியில் விவசாயிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது: சரத் பவார் குற்றச்சாட்டு

புனே: பாஜ ஆட்சியில் விவசாயிகள் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர் என சரத் பவார் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரா, பாரமதி மக்களவை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) அணி சார்பில் வேட்பாளராக நிற்கிறார். அதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனேத்திரா பவார் அந்த கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இதனால், பாரமதியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சுப்ரியாவை ஆதரித்து புரந்தர் பகுதியில் சரத் பவார் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றால், நாடாளுமன்றத்தில் மோடிக்கு ஒரு எம்பி.யின் ஆதரவு குறையும். எனவே மே 7ம் தேதி தேர்தல் நடக்கும் போது, வாக்கு இயந்திரத்தில் சுப்ரியாவின் பெயருக்கு பக்கத்தில் இருக்கும் பட்டனை அழுத்தி வாக்களியுங்கள். நீங்கள் அளிக்கும் வாக்கு சுப்பிரியாவை வெற்றி பெற செய்வதோடு, நாடாளுமன்றத்தில் மோடிக்கு ஒரு எம்பி.யின் ஆதரவை குறைக்கும். ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்ட கொள்கைகளை அமல் செய்ய வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை வழங்க ஒன்றியத்தில் பாஜ அரசு தயாராக இல்லை’’ என்றார்.

The post பாஜ ஆட்சியில் விவசாயிகள் நிலைமை பரிதாபமாக உள்ளது: சரத் பவார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sharad Pawar ,Pune ,Sarath Pawar ,Supriya Sule ,Baramati Lok Sabha ,Maharashtra ,Nationalist Congress ,Sarad Chandra Pawar ,
× RELATED சரத்பவாரை சந்தித்தார் அஜித்பவார் மனைவி