கூடலூர், மே 3: கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை பகுதிக்கு செல்லும் சாலையில் செல்வபுரம் முதல் பாரதி நகர் வழியாக பழைய காவல் நிலையம் வரை சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனை முறையாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் தரப்பில் கூறுகையில்,“கடந்த 2019ம் ஆண்டு இந்த சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, சாலையில் உள்ள பள்ளங்கள் முறையாக சீரமைக்கப்படாததால் சாலை வேகமாக சேதமடைந்தது. இந்த சாலை ஆரூற்றுப்பாறை வழியாக அங்கிருந்து சுபாஷ் நகர், எல்லமலை மற்றும் பெரியசோலை பகுதிகளுக்கு செல்லும் சாலையையும் இணைக்கிறது. கூடலூரில் இருந்து எல்லமலை பெரிய சோலை பகுதிகளுக்கு மிக விரைவாக செல்லும் சாலையாகவும் இந்த சாலை உள்ளது. இச்சாலையில் தினமும் கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஆரூற்றுப்பாறை வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஏராளமான தனியார் ஜீப்புகள் மற்றும் பசுந்தேயிலை, காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை மிகவும் ஆபத்தான சாலையாக மாறி வருகிறது. சாலையை முறையாக சீரமைக்க வேண்டும். இந்த சாலையை இன்டர்லாக் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மிகவும் இறக்கமான பகுதியில் உள்ள இந்த சாலையை தார்சாலையாகவே அமைக்க வேண்டும். இதுகுறித்து ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு அளிக்கவும் உள்ளோம்’’ என்றனர்.
The post ஓவேலி பேரூராட்சியில் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.