சென்னை: சொத்து பிரித்து கொடுக்க சொல்லி, வயதான பெற்றோரை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்த மகனை போலீசார் கைது செய்தனர். வடபழனி திருநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஜூமர்லான் (70). இவர் தனது மனைவி மற்றும் மகன் பிரேம் ஷர்மா, மகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன், மகன் பிரேம் ஷர்மா, குடும்ப சொத்துகளை தனக்கு பிரித்து தரும்படி, தனது தந்தையிடம் பிரச்னை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் சொத்துகளை பிரித்து கொடுக்க சொல்லி தனது தந்தை ஜூமர்லானை, வீட்டை விட்டு வெளியே வரும்படி கூறி சத்தம் போட்டு தகராறு செய்துள்ளார். மகன் பிரச்னை செய்வதால் பயத்தில் அவரது தந்தை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகன் பிரேம் ஷர்மா, வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துவிட்டு கடுமையாக எச்சரித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ஜூமர்லான் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், சொத்து பிரச்னையால் தனது தந்தையை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்த பிரேம் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
The post சொத்து பிரித்து கொடுக்க சொல்லி வயதான பெற்றோரை மிரட்டி காரை உடைத்த மகன் கைது appeared first on Dinakaran.