×

தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர், மின் மாற்றிகள் கொள்முதல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக மின் வாரியம், வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தியுள்ளது. அதேபோல மின் விநியோகத்திற்காக மின் கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகிய தளவாடங்களையும் பயன்படுத்தி வருகிறது. இந்த மீட்டர், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும், ‘டெண்டர்’ வாயிலாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும்போது, தரமான சாதனங்களை மாதிரிகளாக வழங்குகின்றன. ஆனால், டெண்டரை பெற்ற பிறகு தரமான சாதனங்களை விநியோகம் செய்வதில்லை. இதனால், தரமற்ற சாதனங்கள் விரைவில் பழுதாகின்றன. மீட்டர் இருந்தும் இல்லை என அலுவலர்கள் சொல்லும் நிலையும் உள்ளது. இதை தடுக்க தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை மின் வாரியம் தொடங்கியுள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின் மீட்டர்கள், மின்மாற்றிகள் வழங்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் மின் வாரியம் வழங்கும் தனித்துவ எண்ணை அச்சிட்டு தான் சாதனங்களை வழங்க வேண்டும். அவை, கணினியில் பதிவு செய்யப்படும். மீட்டரில், கியூ ஆர் குறியீடு உடன், 16 இலக்கத்தில் மின் வாரியத்தை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் வரிசை எண்கள் இருக்கும். இது, மின்மாற்றிகளில், 15 இலக்கத்திலும்; மின் கம்பத்தில், 13 இலக்கத்திலும் இருக்கும். அந்த எண்ணை வைத்து, எந்த நிறுவனத்திடம் வாங்கப்பட்டது, எந்த பிரிவு அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை அலுவலகத்தில் இருந்தபடி துல்லியமாக அறியலாம். தற்போது, 11.45 லட்சம் மீட்டர்களும், 9,500 மின்மாற்றிகளும் தனித்துவ அடையாள எண்ணுடன் வாங்கப்பட்டுள்ளன. இதனால், சாதனம் பழுதானால், நிறுவனம் மாற்றி தர, அல்லது சரிசெய்து தர வலியுறுத்த முடியும். கையிருப்பில் வைத்து கொண்டே, இல்லை என கூற முடியாது. இனி அனைத்து சாதனங்களும் தனித்துவ எண்ணுடன் தான் வாங்கப்படும் என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள எண்ணுடன் மீட்டர், மின் மாற்றிகள் கொள்முதல்: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...