×

லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு பயணிகளோடு மட்டும் பறந்த துபாய் விமானம்

அவனியாபுரம்: மதுரையில் இருந்து நேற்று துபாய் சென்ற தனியார் விமானம், அதிக எடை காரணமாக 100 பயணிகளின் உடைமைகளை மதுரையிலேயே விட்டுச்சென்றது. இந்த பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மதுரையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தினசரி வழங்கப்படுகிறது. அதில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் தலா 35 கிலோ எடையுள்ள உடைமைகளை லக்கேஜ் பிரிவில் கொண்டு செல்லலாம். மேலும் 8 கிலோ பொருட்களை கையில் எடுத்து செல்லலாம். இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டாம். இதற்கு மேலான கூடுதல் பொருட்கள் ஏர் கார்கோ முறையில் எடுத்துச்செல்லப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

துபாயிலிருந்து 188 பயணிகளுடன் நேற்று பகல் 12.30 மணியளவில் தனியார் விமானம் மதுரை வந்தது. பின்னர் இங்கிருந்து அந்த விமானம் 192 பயணிகளுடன் பகல் 2 மணிக்கு துபாய் புறப்பட்டது. இதற்கிடையே அதில் பயணிகளின் உடைமைகள் மற்றும், ஏர் கார்கோ பார்சல் அதிகளவில் இருந்தது. இதனால் கூடுதல் எடையுடன் விமானம் செல்வதை தடுக்கும் வகையில், 100 பயணிகளின் உடைமைகள் மதுரை விமான நிலைய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் இன்று துபாய் செல்லும் விமானத்ததில் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே உடைமைகள் இல்லாமல் துபாய் சென்ற பயணிகளுக்கு, ஒரு நாளுக்கான உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விமான நிறுவனம் வழங்கும் என்பதுடன், நாளை செல்லும் உடைமைகள் துபாயில் பயணிகளின் இருப்பிடத்தில் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு பயணிகளோடு மட்டும் பறந்த துபாய் விமானம் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Madurai ,Avaniyapuram ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்