×
Saravana Stores

கள்ளக்குறிச்சி சமூக நலத்துறையில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரெண்டு பணியில் இருந்து விடுவிப்பு

கள்ளக்குறிச்சி, மே 3: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் உள்பட 20 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வஉசி நகர் 5வது தெரு பகுதியில் வாடகை கட்டிடத்தில் சமூக நலத்துறை அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டது. ஆனால் அங்கு ஊழியர்களிடையே சில தவறுகள் நடந்ததால் அதனை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதனையடுத்து கடந்த மாதத்திற்கு முன்பு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே சமூக நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது. பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக அலுவலக வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமூக நலத்துறையில் முறைகேடு நடந்ததாக முதல்வர் தனிப்பிரிவு மற்றும் சமூக நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பெண் ஊழியர்களுக்கு சமூக நலத்துறையில் பணியாற்றி வரும் சூப்பிரெண்டு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, சமூக நலத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புகார் மனுக்களையும் முறையாக விசாரணை செய்ய வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து தாலிக்கு தங்கம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக வந்த புகார் மனு குறித்து மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், தவறான தகவல் கொடுத்து பெண் ஊழியரை மிரட்டுவதற்கு யாரோ தவறான புகார் மனு அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த மற்றொரு புகார் மனு குறித்து சமூக நலத்துறை அதிகாரி தீபிகா விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதனையடுத்து அதிகாரி தீபிகா கடந்த 27ம் தேதி 16 பெண் ஊழியர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை செய்துள்ளார். அதில் 7 பெண் ஊழியர்கள் சமூக நலத்துறை சூப்பிரெண்டு தங்களை மிரட்டியதாகவும் சில மாதங்களில் சம்பளம் குறிப்பிட்ட நேரங்களில் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்து, தனது விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என கூறி மிரட்டியதாகவும், சில நேரங்களில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்துள்ளதாகவும், சூப்பிரெண்டு மீது புகார் தெரிவிக்க முடியாமல் அச்சத்தில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30ம்தேதி விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நலத்துறை அதிகாரி வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கூறுகையில். சமூக நலத்துறையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களை சூப்பிரெண்டு விநாயகம் என்பவர் மிரட்டி மனரீதியாக பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். சமூக நலத்துறை சூப்பிரெண்டு விநாயகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சமூக நலத்துறை அரசு செயலர், ஆணையர் அகியோருக்கு அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விசாரணை முடிந்ததும் போக்சோ உள்ளிட்ட வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் தற்போது சமூக நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் சூப்பிரெண்டு விநாயகத்தை உடனே பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளேன், என்றார். இதையடுத்து சமூக நலத்துறை சூப்பிரெண்டு விநாயகம் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கள்ளக்குறிச்சி சமூக நலத்துறையில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரெண்டு பணியில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi social welfare department ,Kallakurichi ,Social Welfare Department ,Vausi Nagar ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு..!!