கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் மீது கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளது. அதேபோல மற்றொரு உரிமையாளரான சத்தியானந்த் மீதும் மோசடி வழக்கு உள்ளது.இந்நிலையில் கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் நிதி சார்பில் பாமகவினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், ‘‘கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைவி3 ஆட்ஸ் நிறுவனம் விளம்பரங்களை பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.
அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இதுவரை 2000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது. கடந்த ஆண்டு மைவி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுத்தேன். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி எனது தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
அதற்கு பயன்படுத்தப்பட்ட செல்பேசி எண் மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சத்தியானந்த் மற்றும் விஜயராகவன் அறிவுறுத்தலால்தான் இந்த கொலை மிரட்டல் எனக்கு வந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சத்தியானந்த், விஜயராகவன் மற்றும் ஒருவர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
The post பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3 உரிமையாளர்கள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு appeared first on Dinakaran.