×

ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கையுடன் சிறப்பு வசதிகள்

சேலம், மே3: கோடை வெப்ப அலை பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கையுடன் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகபட்சமாக 108டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று, அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மதிய நேரத்தில் வெப்ப அலை காரணமாக அனல் காற்று வீசுவதால் மயக்கம், சுயநினைவு இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், டெலிவரி வேலை செய்பவர்கள், காவல்துறையினர், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரும் வெயில் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வெயில் காரணமாக ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து முன்னெற்பாடுகளும் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம், கொப்பளங்கள், வேர்குரு, அம்மை, தட்டம்மை மற்றும் சரும நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது. நடமாடும் மருத்துவக்குழு வாயிலாக கோடைக்கால நோய் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உப்பு சர்க்கரை கரைசல், ஓர்ஆர்எஸ் பாக்கெட்டுகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்பகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 முதல் 10வரையிலான சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் அவசர கால மருத்துவ உதவிக்கு மற்றும் ஆலோசனைகளுக்கு 104 என்ற சுகாதார உதவி மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்.இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்ச்சத்தை தக்க வைப்பது அவசியம்
‘‘பொதுமக்கள் வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.எனவே, தர்பூசணி, முலாம்பழம், நுங்கு உள்ளிட்ட பருவகால பழங்கள், நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும். அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் நபர்கள், திறந்தவௌியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் உப்பு சர்க்கரை கரைசல் நீரையும் குடிக்கலாம். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், மெல்லிய பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் சருமநோய்கள் வருவதை தடுக்க முடியும்,’’ என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கையுடன் சிறப்பு வசதிகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 5வது நாளாக பெய்த கனமழை