நாமக்கல், மே 3: நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், சமீபகாலமாக ஆன்லைன் மூலம் நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொது இடங்களில் செல்போன் திருட்டும் அதிகரித்து வருகிறது. தொலைந்து போன செல்போன்களை நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனாலும், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு என்ற பெயரிலும், அதிக லாபம் தருவதாக கூறியும் வரும் தகவல்களை நம்பி, பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சைபர் கிரைமில் தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: தற்போது பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு, அவற்றை தவிர்க்க வேண்டும். பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறி உங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி பெயரை சொல்லி, கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, உங்களது வங்கி விவரங்களை கேட்டால், கொடுத்து ஏமாறக்கூடாது. உங்களது வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை பணம் வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம்.
உங்கள் பகுதியில் உள்ள தெரிந்த நபர்கள் அல்லது உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான செல்போன் அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும், மற்றும் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி பணம் முதலீடு செய்ய சொல்லி பரிந்துரை செய்தால், அதை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி, கல்லூரியில் படிக்கும் மகன், மகளை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்வதாகவோ, அல்லது கடத்தி விட்டதாகவோ கூறி, உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினால், உங்களது மகன், மகளை உடனே தொடர்பு கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்.
செல்போன், வாட்ஸ்அப் கால் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களை மும்பை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் என்றும் சிபிஐ அதிகாரிகள் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டு, உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டு உள்ளதாகவோ அல்லது உங்களது வங்கி கணக்கில் முறைகேடாக பணப் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதாகவோ கூறி, வீடியோ கால் மூலம் உங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டி, உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் கொடுத்து ஏமாறக் கூடாது. பணம் கேட்டு மிரட்டினாலும், கொடுத்து ஏமாறக் கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டும்.
பொதுமக்கள் யாரேனும் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து, புகார் செய்ய வேண்டும். இவ்வாறு எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
The post மாவட்டத்தில் ஆன்லைன் குற்றங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.