அழகும் அறிவும்
கன்னியா ராசி குழந்தைகள் பார்ப்பதற்கு வசீகரமாகவும், தெளிவான முகத்துடனும், அகன்ற நெற்றியோடும், புத்தி கூர்மை உள்ளவர்களாகவும் தோன்றுவார்கள். நிதானமான உயரமும் சதைப் பிடிப்பும் இருக்கும். நேரே நிமிர்ந்து நம் முகம் பார்த்துப் பேசுவார்கள். சில சொற்களில் மட்டுமே பதில் சொல்வது இவர்களின் பழக்கம். இனிமையான குரல் வளம் உடைய இவர்கள், எதையும் திட்டமிட்டுச் செய்வதில் வல்லவர்கள். உடம்பை அலட்டிக் கொள்ளாமல் மூளையின் செயல்பாட்டால் வெற்றி காண்பவர்கள்.
கூர்மதியும் நினைவாற்றலும்
கன்னியா ராசி குழந்தைகள், அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். யார் என்ன பேசினாலும் அதைக் கூர்ந்து கவனித்து, மூளையின் ஓர் ஓரத்தில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் தக்க சமயத்தில் அவர்கள் பேசிய வார்த்தைகளை நினைவூட்டி அவர்களைத் திகைக்க வைப்பார்கள். சிறு குழந்தை தானே என்று இவர்களை அலட்சியமாகக் கருதக் கூடாது. பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரியும். வயது வரும்போது அவர்கள் அதைச் சரியாக புரிந்து கொண்டு பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.
சவால்களும் சாதனைகளும்
கன்னியா ராசிக் குழந்தைகளுக்கு இந்த உலகில் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் நிறைய உண்டு. யாரேனும் ஒருவர் முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதை நான் முடித்துக் காட்டுவேன் என்று சவால் விட்டு முடித்துக் காட்டுவார்கள். அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தமது கூர்மையான புத்தி காரணமாக சரியாகத் திட்டமிட்டு செய்து முடிப்பார்கள்.
குணமும் மணமும்
கன்னியா ராசிக் குழந்தைகளை மற்றவர்கள் முன்பு ரைம்ஸ் சொல்லு, பாட்டு பாடு, டான்ஸ் ஆடு என்று வித்தை காட்டும் குரங்கு போல அதையும் இதையும் சொல்லவோ செய்யவோ வற்புறுத்தக் கூடாது. இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் குணம் உடையவர்கள் அல்ல. பொத்தி வைத்த மல்லிகை மொட்டு போன்ற மனம் உள்ளவர்கள், தக்க சமயத்தில் தங்களின் திறமையைத் தேவையான இடத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.கூர்மையான புத்திசாலிகள் என்றாலும், மற்றவர் முன்னால், தான் ஏதேனும் ஒன்று தவறிப்போய் அவமானப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிக கவனம் உள்ளவர்கள். எனவே தங்களைப் பற்றி பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ள மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
பரிசும் கௌரவமும்
கன்னியா ராசி குழந்தைகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்தால், அவர்கள் உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்களாக உருவாவது திண்ணம். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தாயும் தந்தையும் அவ்வப்போது பாராட்டி பரிசுகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். தங்களுடைய எந்த ஒரு செயலாவது கவனிக்கப்படாமல் போய்விட்டால், பிறகு அந்த செயலை அல்லது அந்த திறமையை அவர்கள் வெளிப்படுத்தத் தயங்குவர். எனவே, ஒவ்வொரு முறையும் அவர்களைக் கொஞ்சி கொண்டாடி பரிசு கொடுத்து பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். கன்னியா ராசி குழந்தைகளுக்கு முன்னே செல்வதைவிட பின்னே இழுக்கப்படுவதில் வேகம் அதிகம் இருக்கும். எனவே, அவர்களை தாயும் தந்தையும் இரண்டு கையையும் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். மிகுந்த தயக்கமும் கூச்ச சுபாவமும் உடைய இவர்கள் பாராட்டுக்களாலும் பரிசுகளாலும் மட்டுமே முன்னேறிச் செல்வதுண்டு.
கல் ஒன்று, காய் மூன்று
கன்னியாராசி குழந்தைகள் ஒரே கல்லில் மூன்று காய் அடிக்கும் வித்தை தெரிந்தவர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலை செய்வார்கள். இரண்டு மூன்று கோர்ஸ் படிப்பார்கள். பார்ட் டைம் வேலை செய்துகொண்டே படிப்பார்கள். சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டு படிப்பார்கள். இரண்டு மூன்று பயிற்சிகளை ஒரே நேரத்தில் மற்றவர்களுக்குத் தருவார்கள். மாணவப் பருவத்திலேயே சம்பாதிப்பார்கள். டியூஷன் எடுப்பார்கள்.
படிப்பும் வருமானமும்
கன்னியாராசி மாணவர்கள், மாலை நேரங்களில் கம்ப்யூட்டர் சென்டர், டியூஷன் சென்டரில் வேலை செய்வர். கணிதம் மட்டுமல்ல கணினியும் இவர்களுக்குக் கைவந்த கலையாகும். கணினி சார்ந்த அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு அத்துப்படி. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் வரைகலை எனப் பல துறை சார்ந்த ஆர்வம் இவர்களுக்கு இருக்கும்.
இசையறிவும் மொழியறிவும்
நல்ல குரல் வளம் இருப்பதால், பெண் குழந்தைகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கலாம். ஆண் குழந்தைகளுக்கு இசை கருவிகளை இசைக்க பயிற்சி அளிக்கலாம். பல மொழி அறிவு இவர்களுக்கு எளிதில் வாய்க்கப் பெறும். எனவே, படிக்கும் பருவத்தில் இவர்களை இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என்று பல மொழிகளை கற்றுக் கொள்ள செய்யலாம்.
வசதியான வாழ்க்கை
சொகுசு பேர்வழிகள் இல்லாவிட்டாலும், வசதியாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். பெற்றோர் வீட்டில் வசதி இல்லை என்றால், பெரியம்மா பெரியப்பா வீட்டுக்குக் கூடப் போய் அங்கே தங்கிப் படித்து, பெரிய ஆள் ஆகிவிடுவார்கள். இக்குழந்தைகள், சண்டை சச்சரவு நடக்கும் வீடுகளிலும் தங்குவது இல்லை. அன்பும் அமைதியும் இருக்கும் இல்லங்களில் போய் தங்குவதைத்தான் விரும்புவார்கள். எனவே, வீட்டில் கன்னியா ராசி குழந்தைகளின் பெற்றோர்கள் சண்டை போட்டால் உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிந்து விடுவது உறுதி.
புகழ் பெறும் ராசி
கன்னியா ராசி மாணவர்கள் இயற்கையிலேயே புத்திசாலிகள், நுண்ணறிவு படைத்தவர்கள் என்பதால், இவர்களைப் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்து, ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், இவர்கள் சமுதாயம் போற்றும் சாதனையாளர்களாக புகழ் பெறுவதில் ஐயமில்லை.
The post கன்னியா ராசி குழந்தையை வளர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.