×

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சைவ ஆமை சூப் தயார் செய்யும் சிலி நாட்டு நிறுவனம்..!!

சிலி: நம் ஊர்களில் அசைவம் சாப்பிடாதவர்கள் மீன், மட்டன், சிக்கன் மசாலாவை சைவ குழம்பில் சமைத்து சாப்பிடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிலி நாட்டிலோ உணவு நிறுவனம் ஒன்று ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஆமை சூப்பிற்கு மாற்றாக சைவ ஆமை சூப்பை கண்டுபிடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளது. லத்தீன், அமெரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகளில் ஆமை சூப் வெகு பிரபலம். ஆமை கறியை வேகவைத்து செய்யப்படும் இந்த சூப், அவர்களின் உணவு கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்த ஒன்று. அண்மை காலமாக வேட்டையாடுதல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சூப் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன.

இதனால் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினங்களுக்கான சிவப்பு பட்டியலில் பச்சை ஆமை சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஆமை சூப் பிரியர்களுக்காகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியோடு சைவ ஆமை சூப்பை தயார் செய்திருக்கிறது சிலி நாட்டு உணவு நிறுவனம் நாட்கோ. பச்சை ஆமையின் சுவைக்கு நெருக்கமான மாற்றை கண்டுபிடிக்க விஸிபி என்ற ஏ.ஐ. தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது.

இந்த சூப்பிற்கு சுவை கொடுப்பதற்காக 3 லட்சம் தாவரங்களையும், பல்லாயிரக்கணக்கான தாவர சேர்க்கைகளையும் விஸிபி ஆய்வு செய்திருக்கிறது. முடிவில் ஆமை சூப்பை போலவே சுவை கொண்ட தாவர புரதங்களை கண்டறிந்து சைவ ஆமை சூப் மெனுவை தயாரித்து கொடுத்திருக்கிறது விஸிபி. இப்போதைக்கு இந்த சூப் விற்பனைக்கு வரவில்லை என்றாலும் இதனை தயார் செய்வது எப்படி என்று ஆன்லைனில் கற்றுத்தருகிறது நாட்கோ.

The post ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சைவ ஆமை சூப் தயார் செய்யும் சிலி நாட்டு நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chile ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!