×
Saravana Stores

சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்

சிறப்புக்கள் பல வாய்ந்திருக்கும் மாதமே இந்த சித்திரை மாதம். ஜகத்துக்கே ஆசார்யரான ஸ்வாமி ராமானுஜரை இவ்வுலகம் உவக்க, உலகிற்கு ஒரு திருவாதிரை நன்னாளில் வழங்கியது இந்த சித்திரை மாதம்தான். உலகம் கொண்டாடும் ஒரு குருவை அளித்த இதே சித்திரை மாதம்தான், குருவையே தம் உலகாகக் கொண்ட இரு சீடர்களையும் தந்திருக்கிறது. சித்திரையில் சித்திரைதான் அப்படி ஒரு பெரிய சிறப்பைப் பெற்றிருக்கும் அற்புத நாள். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் கூடிய அப்படி ஒரு நாளில் அவதரித்து குரு பக்தியின் மேன்மையை நமக்கு இன்றளவும் காட்டிக் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள், மதுரகவி ஆழ்வாரும், அனந்தாழ்வாரும்.

“தேவு மற்றறியேன் எம் குருவான நம்மாழ்வாரே நான் அறிந்த ஒரே தெய்வம், அவரைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் நான் தொழ மாட்டேன்’’ என்று இறுதி வரை உறுதி பூண்டு வாழ்ந்த மதுரகவி ஆழ்வார் திரு அவதாரம் செய்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்கோளூர் எனும் திவ்ய தேசத்தில்தான். திருமாலின் வாகனமான, கருட பகவானின் அம்சமாகத் தோன்றியவர் இவர் என்ற பெருமையும் மதுரகவி ஆழ்வாருக்கு உண்டு.

ஒரு முறை மதுரகவி ஆழ்வார் வட திசை யாத்திரை மேற்கொண்டு அயோத்திக்குக் சென்றிருந்தபோது, அங்கே ஒரு ஒளி அவருக்குத் தென்பட்டது. அப்பேரொளி எங்கிருந்து வருகிறது என்று அறிவதற்காக அந்த ஒளியை அவர் தொடர்ந்து வர, அந்த ஒளியோ அவரை தென் நாட்டிற்கு, திருக்குருகூருக்கு அருகே அழைத்து வந்து மறைந்துவிட்டது.

திருக்குருகூரை வந்தடைந்த மதுரகவி ஆழ்வார், அவ்வூர் மக்களிடம் இவ்வூரில் ஏதேனும் அதிசயம் இருக்கிறதா என்று கேட்க, அவ்வூர் மக்களோ புளிய மரத்தடியில் நம்மாழ்வார் 16 வருடங்களாக கண்களை மூடிய நிலையில் தியானம் செய்து கொண்டிருக்கும் அதிசயத்தை கூற, மதுரகழி ஆழ்வாரும் நம்மாழ்வாரைக் கண்டதுமே அவரை விழுந்து வணங்கி அவரிடம் ஒரு கேள்வி கேட்டு வியக்கத்தக்க பதிலும் பெற்று இனி இவரே என் தெய்வம் என தீர்மானித்து தொடுத்ததுதான் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரக்கூடிய “கண்ணி நுண்சிறுத்தாம்பு” என்ற பதினோரு பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம்.

“நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே”

என்று தம் குருவான நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு கொண்டாடியவர், மதுரகவியாழ்வார்.அனந்தாழ்வாரின் சீடன் என்ற ஸ்ரீனிவாச பெருமாள் குருவின்மீது அபரிமிதமான பக்திகொள்பவர்களின் மீது தனக்கு எப்போதுமே தனியொரு பிரியம் உண்டு என்று அந்த திருமலையானே காட்டிக் கொடுத்தது, சித்திரையில் உதித்த அனந்தாழ்வாரின் வழியாகதான். திருவரங்கத்திலிருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சில வைணவப் பெரியோர்கள் நடைப் பயணமாகவே திருமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் அது. வாட்டி எடுக்கிற வெயிலின் தகிப்பு ஒரு புறம், வயிற்றில் பசி ஒரு புறம் என அப்பெரியோர்கள் அவதிப்படுவதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தம் சந்நதியை விட்டு ஒரு சிறுவனின் ரூபத்தில் கையில் பிரசாதங்களோடு அந்த பெரியவர்களுக்குக் கொடுப்பதற்காக ஓடியே வந்துவிட்டான்.

அலர்மேல் மங்கையின் நாதன். வந்த சிறுவன் தன்னை என்னவென்று சொல்லிக் கொண்டான் தெரியுமா? “நான் ஸ்வாமி ராமானுஜரின் சத் சீடனான அனந்தாழ்வாரின் சீடன். நீங்கள் எல்லாம் பசியில் வாடிக் கொண்டிருப்பதை அறிந்த எம் குருவான அனந்தாழ்வார், தாம் உங்களுக்கு எல்லாம் இந்த பிரசாதத்தைக் கொடுத்தனுப்பினார் என்று கூற, வந்த பெரியவர்களோ அந்த சிறுவனின் பேச்சில் நம்பிக்கை ஏற்படாமல், “ஓ.. உன் குரு என்றால் அவரின் தனியனை சொல்’’ என்று கேட்க, அப்போது திருமலைவாசனே அனந்தாழ்வாரையே தம் குருவாக, ஆசார்யனாக பாவித்துக் கொடுத்த தனியனை என்னவென்று சொல்ல?

(குருவின் பெருமையைப் போற்றி சொல்லப்
படும் பாசுரத்தைத் தான் தனியன் என்று
குறிப்பிடுவார்கள்).

வயிறார சிறுவன் கொண்டு வந்த பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு திருமலைக்கு சென்று அனந்தாழ்வாரிடம் அவர் அனுப்பிய பிரசாதத்தையும், அப்பிரசாதத்தை கொண்டு வந்த சிறுவனை பற்றியும், அந்த சிறுவன் அனந்தாழ்வாரின் தனியன் சொன்ன விதத்தையும் பெரியவர்கள் பாராட்டியபோதுதான் அனந்தாழ்வாருக்கும் அந்த பெரியோர்களுக்கும் தெரிய வந்தது, சிறுவனின் வடிவில் வந்தது, பிரசாதம் தந்தது சீனிவாசனே என்று.சித்திரை நன்னாளில் நாமும் இந்த இரு சத் சீடர்களையும் மனதால் தியானித்துக் கொண்டு குரு அருளுக்கு பாத்திரமாவோம்.

நளினி சம்பத்குமார்

 

The post சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள் appeared first on Dinakaran.

Tags : Swami Ramanuja ,
× RELATED வடிவழகிய நம்பி பெருமாள்