×

ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று முன்தினம் தனியார் பஸ் 70 பயணிகளுடன் புறப்பட்டது. ஏற்காடு வாழவந்தியை சேர்ந்த ஜனார்த்தனன் (33) பஸ்சை ஓட்டி வந்தார். 13வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 100 அடி பள்ளத்தில் பாய்ந்து 11வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், திருச்செங்கோடு முனீஸ்வரன் (11), சேலம் ஆண்டிப்பட்டி ஏ.சி.எம் நகர் கார்த்திக் (37), கன்னங்குறிச்சி ஹரிராம்(57), ஏற்காடு பிடிஓ அலுவலக ஊழியர் சந்தோஷ் (41), கிச்சிப்பாளையம் மாது (60) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த பயணிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து நடந்த பகுதிக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதில், டிரைவர் வேகமாக பஸ்சை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. மேலும் அளவுக்கதிகமான பயணிகளையும் பஸ்சில் ஏற்றி வந்துள்ளனர். இதனால் கொண்டை ஊசி வளைவில் ஸ்டியரிங்கை வேகமாக திருப்ப முடியாமல் தடுப்பு சுவரை உடைத்து 100 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்துள்ளது. டிரைவரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிரைவர் ஜனார்த்தனன் மீது இந்திய தண்டனை சட்டம் 279 (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்), 337 (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி சிறு காயத்தை ஏற்படுத்துதல்), 398 அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி பெரிய காயத்தை ஏற்படுத்துதல்), 304(ஏ) (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியது) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளிகளே அதிகம் சிக்கியுள்ளனர்
ஏற்காட்டில் வரும் ஜூன் மாதம் கோடைவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்ேனற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக சேலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தினமும் ஏற்காட்டிற்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்தவகையில் ஏற்காடு சென்றவர்களே நேற்று முன்தினம் தனியார் பஸ்சில் சேலத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியுள்ளனர். எளிய குடும்பங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருப்பதால் குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்
ஏற்காடு விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில்,‘ சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்,’என்றார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Yercaud hill ,Salem ,Yercaud ,Salem district ,Yercaud Vazhavanti ,mountain pass ,Dinakaran ,
× RELATED உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2...