துப்ரி: அசாமில் மாபியா கும்பலின் ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மொத்தம் 14 மக்களவை தொகுதிகளை கொண்ட அசாமில் ஏற்கனவே 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி 3ம் கட்டமாக வாக்கு பதிவு நடக்கிறது. இந்நிலையில், துப்ரியில் நேற்று நடந்த பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘தெலங்கானாவில் அசாதுதீன் ஓவைசியுடன் பாஜ ரகசிய உறவு வைத்துள்ளதை போல அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் பத்ருதின் அஜ்மலுடன் முதல்வர் ஹிமந்தா ரகசிய புரிந்துணர்வு வைத்துள்ளார், இவை இரண்டும் காங்கிரஸை தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டவை.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கர்நாடக மஜத எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகாவில் வாக்கு சேகரித்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பிரஜ்வல் நாட்டில் இருந்து தப்பி சென்ற போது அதை தடுக்க மோடி தவறிவிட்டார். தேர்தல் பத்திர திட்டத்தில் மிக பெரிய மோசடி நடந்துள்ளது. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜ கட்சி உலகின் மிக பெரும் பணக்கார கட்சியாக உருமாறியுள்ளது.70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசிடம் கூட இந்த அளவு பணம் இல்லை. அசாமில் மாபியா கும்பலின் ஆட்சி நடக்கிறது.
முதல்வர் ஹிமந்தாவும் அவருடைய அமைச்சர்களும் தங்களுடைய சொந்த நலனை கவனிப்பதிலும் ஊழல் செய்வதிலும் தான் முழு கவனம் செலுத்துகின்றனர். வேலை இல்லாமல் அசாமிய இளைஞர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்’’ என்றார்.
The post அசாமில் மாபியா ஆட்சி நடக்கிறது: பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.