×
Saravana Stores

வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் பணி தீவிரம்

கரூர், மே 1: காவிரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் நெரூர், திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே ரூபாய் 89.92 கோடி மதிப்பில் மேம்பால பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான நதிகளில் காவிரி ஆறு ஒன்றாகும். மேலும் நதி உற்பத்தியாகி அதிக கிலோமீட்டர் தூரம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன பலன் தரக்கூடிய முக்கியமான ஆறுகளில் காவிரி ஒன்று. இன்னும் சொல்லப்போனால் டெல்டா மாவட்டமே காவிரி ஆற்றை நம்பியே உள்ளது. அந்த அளவிற்கு காவிரி ஆறு முக்கியமானதாகும். இதே போல் கரூர், திருச்சி, நாமக்கல், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு பிரிப்பதிலும் காவிரி ஆறு முக்கிய பங்கு வைக்கிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் நெரூர் முதல் திருச்சி மாவட்டம் உன்னியூர் வரை உயர் மட்ட பாலம் அமைத்து ஆற்றை கடந்து சென்றால் சுமார் ஐந்து நிமிடத்திற்குள் அங்கும் இங்கும் செல்ல முடியும்.

(நெரூர் டு உன்னியூர்) இந்த நிலையில் கரூர் மற்றும் திருச்சி பகுதி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாளாக நெரூர்- உன்னியூர் வரை காவிரி ஆற்றில் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசால் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழக அரசால் ரூபாய் 89.92 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 1092 மீட்டர் நீளம், அகலம் 12.90 மீட்டர் கொண்டதாகும். இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் குறிப்பாக கரூர் திருச்சி பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த பாலத்தில் கரூர் மாவட்டத்தில் நெரூர் அருகே 628 மீட்டர் அணுகு சாலையும், உன்னியூர் பகுதிக்கு 538 மீட்டர் அணுகு சாலையும் அமைக்கப்படவுள்ளது.

இவ்வாறு பாலம் அமைப்பதால் மக்களுக்கு போக்குவரத்து வசதி அதிகப்படுவதுடன், எரிபொருள் செலவும் கணிசமாக குறைக்கப்படும். தற்போது பால பணிகள் நடைபெற்று பாலத்தின் உறுதி தன்மை ஆய்வு பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் உன்னியூர் காட்டுப்புதூர் வாய்க்கால் பகுதியில் சிறு பாலப்பணி டென் கான்கிரீட் கைப்பிடி சுவர் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் நெரூர் பகுதியில் 78% அணுகு சாலை பணி நிறைவு பெற்றுள்ளது. உன்னியூர் பகுதியில் சாலையில் தடுப்பு சுவர் கான்கிரீட் போடும் பணி 50 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. பாலம் அமைப்பதற்கு 138 பெரிய அளவிலான பில்லர் அமைக்கப்பட உள்ளது. தற்போது பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் பாலத்தின் தன்மை குறித்தும் தொழில்நுட்பம் குறித்து எவ்வாறு பாலம் கட்டுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.

அவர்களுக்கு பாலத்தின் தன்மை குறித்தும், எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்பது குறித்தும் பொறியாளர் முருகானந்தம் விளக்கி கூறினார். தற்போது கட்டப்பட்டு வரும் இந்த பாலமும் நிறைவு பெற்றதும் கரூர் மாவட்டத்தில் மட்டும் அமராவதி ஆற்றின் குறுக்கே ஐந்து பாலங்கள் உள்ள பகுதியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

The post வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Nerur-Unniyur ,Karur ,Nerur ,Karur district ,Unniyur ,Trichy district ,Kaveri River ,India ,
× RELATED காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு;...